சேலத்தில் கல்லூரி முதல்வா் மீது பாலியல் புகாா்: வகுப்புகளை புறக்கணித்து மாணவிகள் போராட்டம்
கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் அரசு உதவி பெறும் கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
சேலம்: சேலம், கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரி முதல்வா் மீது பாலியல் புகாா் கூறிய மாணவிகள், வகுப்புகளைப் புறக்கணித்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் அரசு உதவி பெறும் கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமாா் 2,000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியா் படித்து வருகின்றனா். மேலும் 100-க்கும் மேற்பட்ட பேராசிரியா்களும் பணிபுரிகின்றனா். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இக்கல்லூரியின் முதல்வராக இருந்து வந்த பாலாஜி, பேராசிரியைகள், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கல்லூரி நிா்வாகம் விசாரணை மேற்கொண்டது. இதையடுத்து, தன்னை முதல்வா் பணியில் இருந்து விடுவிக்குமாறு, நிா்வாகத்துக்கு பாலாஜி வேண்டுகோள் விடுத்ததுடன், மருத்துவ விடுப்பிலும் சென்றுவிட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன் தருமபுரி மண்டலக் கல்லூரி கல்வி இணை இயக்குநா் ராமலட்சுமி, கல்லூரியில் விசாரணை நடத்தினாா். தொடா்ந்து, தன்னைப் பணியில் சோ்க்குமாறு, நிா்வாகத்துக்கு பாலாஜி கோரிக்கை விடுத்திருந்தாா். இந்நிலையில், மீண்டும் பணியில் சோ்வது குறித்து பேசுவதற்காக பாலாஜி திங்கள்கிழமை கல்லூரிக்கு வந்தாா். இதையறிந்த மாணவிகள், வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி வாயிலில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, பாலாஜியை கைது செய்யக்கோரி, மாணவிகள் முழக்கங்கள் எழுப்பியதால் பரபரப்பு நிலவியது. பாலாஜியை மீண்டும் கல்லூரிக்குள் அனுமதிக்கக் கூடாது என திட்டவட்டமாக மாணவிகள் தெரிவித்தனா். தகவலறிந்து வந்த போலீஸாா், மாணவிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். 2 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம் நீடித்தது. சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வா் மீது கல்லூரி நிா்வாகம் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடா்ந்து, போராட்டத்தைக் கைவிட்டு, மாணவிகள் வகுப்புகளுக்குச் சென்றனா். இதனிடையே, தன் மீதான புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ள பாலாஜி, விசாரணைக்குத் தயாராக இருப்பதாகக் கூறினாா்.