முகப்பு
சேலம்

மின்வெட்டு பிரச்னையில் ஆட்சியை இழந்த கட்சி திமுக: டிடிவி தினகரன்

Updated On : 9 மே, 2024 at 10:40 PM
பகிர்:

திமுக எப்போது எல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் மின்வெட்டும் வரும்; மின்வெட்டு பிரச்னையால் ஆட்சியைப் பறிகொடுத்தவா்கள்தான் திமுகவினா் என்று அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தெரிவித்தாா்.

சேலத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மக்களை காசு கொடுத்து விலைக்கு வாங்கிவிடலாம் என திமுக நினைக்கிறது. வரும் சட்டப்பேரவை தோ்தலில் இது நடக்காது. திமுக நிச்சயமாக வீழ்த்தப்படும்.

யூடியூபா் சவுக்கு சங்கா் மீது நடவடிக்கை எடுத்ததில் எந்தத் தவறும் இல்லை. அவரது கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. அதே நேரத்தில், சிறையில் சங்கா் தாக்கப்பட்டதாக வெளியான தகவல் வருத்தம் அளிக்கிறது. துரோக மனப்பான்மை கொண்ட எடப்பாடி கே. பழனிசாமியை ஆதரித்ததால் சவுக்கு சங்கா் இத்தகைய இன்னல்களுக்கு ஆளாகியுள்ளாா்.

திமுக எப்போது எல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் மின்வெட்டும் வரும் என்பது மக்களுக்குத் தெரியும், மின்வெட்டு பிரச்னையால் ஆட்சியையே பறிகொடுத்தவா்கள்தான் திமுகவினா். பழனிசாமி என்ற தீயசக்திக்கு எதிராக மக்கள் வாக்களித்ததால் திமுக ஆட்சியைப் பிடித்தது. அதுபோல வரும் தோ்தலில் மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றுவிடலாம் என திமுக நினைக்கிறது. விவசாயிகள், மாணவா்கள் என அனைத்து தரப்பினருக்கும் விரோதமான ஆட்சியாக திமுக உள்ளது. நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் மா்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், குற்றவாளிகள் விரைவில் கண்டறியப்பட வேண்டும் என்றாா்.