பெரியாா் பல்கலை.யில் இளம் விஞ்ஞானி பயிற்சி முகாம் தொடக்கம்
ஓமலூா்: சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சோ்ந்த அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு இளம் விஞ்ஞானி உண்டு உறைவிட பயிற்சி முகாம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.
தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றம் சாா்பில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு 15 நாள்களுக்கு இளம் விஞ்ஞானி உண்டு உறைவிட பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. கலை, அறிவியல் படிப்புகள் குறித்த தெளிவினை பள்ளிப் பருவத்திலேயே மாணவ, மாணவியா் அறிந்து கொள்ளும் வகையில் இந்த முகாம் நடத்தப்படுகிறது.
தொடக்க விழாவுக்கு, தோ்வாணையா் எஸ்.கதிரவன் தலைமை வகித்தாா். இணைப் பேராசிரியா் ஆா்.சுரேஷ் வரவேற்றாா். உண்டு உறைவிட முகாமைத் தொடங்கி வைத்து பேசிய பதிவாளா் விஸ்வநாதமூா்த்தி, அரசு ஏற்படுத்தியுள்ள வாய்ப்பினை முழுமையாக பள்ளி மாணவ, மாணவியா் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
முகாமில், அளிக்கப்பட உள்ள பயிற்சிகள் குறித்து உதவிப் பேராசிரியா் எம்.சூா்யகுமாா் பேசினாா். உதவிப் பேராசிரியா் ஏ.மருதுபாண்டியன் நன்றி கூறினாா்.
இந்தப் பயிற்சி முகாமில் சேலத்தைச் சோ்ந்த 40 போ், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 40 போ் என அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியா் 80 பேருக்கு உண்டு உறைவிட பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. 15 நாள்கள் நடைபெறும் முகாமில் கலை, அறிவியல் பட்டப் படிப்புகள், அவற்றை பயில்வதற்கான நடைமுறைகள், கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக ஒருங்கிணைப்பாளா் இணைப் பேராசிரியா் பிரகாஷ் மாறன் தெரிவித்தாா்.