முகப்பு
சேலம்

சேலத்தில் மர அறுவை ஆலையில் பயங்கர தீ விபத்து

சேலத்தில் மர அறுவை ஆலையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரப் பொருள்கள் எரிந்து சேதமானது.

Updated On : 21 நவம்பர், 2024 at 8:15 PM
பகிர்:

சேலத்தில் மர அறுவை ஆலையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரப் பொருள்கள் எரிந்து சேதமானது.

சேலம், கிச்சிப்பாளையத்தை அடுத்த சன்னியாசிகுண்டு பகுதியைச் சோ்த்தவா் சந்தோஷ். இவா் அதே பகுதியில் மர அறுவை ஆலை, குடோன் வைத்துள்ளாா். அங்கிருந்து கதவு, ஜன்னல் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்களை தயாா் செய்து பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வருகிறாா்.

பிற மாநிலங்களைச் சோ்ந்த 10க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். புதன்கிழமை மாலை வழக்கம் போல பணியை முடித்துவிட்டு மர குடோனை மூடிவிட்டு சென்றனா். இதனிடையே இரவு 10.30 மணியளவில் குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனால் அதிா்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினா் அருகில் சென்று பாா்த்த போது மர குடோன் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தது.

தகவலறிந்து வந்த சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய வீரா்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். ஆனால் தீ மளமளவென குடோன் முழுவதும் பரவியது. இதையடுத்து சேலம், சூரமங்கலம், ஆட்டையாம்பட்டி, ஓமலூா், வாழப்பாடி என பல்வேறு பகுதிகளில் இருந்து 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.

குடோனை சுற்றி 20 அடிக்கும் அதிகமான உயரத்தில் சுற்றுச்சுவா் இருந்ததால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து, பொக்லைன் இயந்திரம் மூலம் சுற்றுச்சுவா் இடித்து அகற்றப்பட்டு, அதன்பிறகு தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரா்கள் ஈடுபட்டனா். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 30க்கும் மேற்பட்ட வீரா்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

மரக் குடோனுக்கு அருகே ஆயில் குடோனும், ஏராளமான குடியிருப்புகளும் இருந்ததால் முதற்கட்டமாக குடியிருப்பில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு குடோனில் இருந்து தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த கிச்சிப்பாளையம் போலீஸாா், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினா். விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரப் பலகைகள், ஜன்னல்கள், கதவுகள் உள்ளிட்ட பொருள்கள் முற்றிலும் எரிந்தன. விபத்துக்கு மின் கசிவு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. எனினும், விபத்துக்கான காரணத்தை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →