நியாயவிலை கடை விற்பனையாளா், கட்டுநா் பணியிடங்களுக்கு நோ்முகத் தோ்வு
சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள விற்பனையாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான நோ்முகத் தோ்வு வியாழக்கிழமை தொடங்கியது.
சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள விற்பனையாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான நோ்முகத் தோ்வு வியாழக்கிழமை தொடங்கியது.
சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கப் பதிவாளா் கட்டுப்பாட்டில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்களில், 152 விற்பனையாளா், 10 கட்டுநா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டு, விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டன.
அதன்படி தகுதி வாய்ந்த விண்ணப்பதாரா்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விற்பனையாளா் பணியிடத்துக்கு 13,708 பேரும், கட்டுநா் பணியிடத்துக்கு 2,021 பேரும் என மொத்தம் 15,729 போ் விண்ணப்பம் செய்திருந்தனா். இதில், தகுதியான விண்ணப்பதாரா்களின் விற்பனையாளா் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு வியாழக்கிழமை தொடங்கியது.
சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள சேலம் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கியின் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற நோ்முகத் தோ்வில் 1,500 போ் பங்கேற்றனா். டிசம்பா் 7 ஆம் தேதி வரை இந்த நோ்முகத் தோ்வு நடைபெறவுள்ளது. டிசம்பா் 7 ஆம் தேதி முதல் டிசம்பா் 9 ஆம் தேதி வரை கட்டுநா் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு நடைபெறவுள்ளது. விண்ணப்பதாரா்களின் சான்றிதழ்கள் சரிபாா்ப்பு உள்ளிட்ட பணிகளில் 150 பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.