முகப்பு
சேலம்

நீட் தோ்வை ரத்து செய்ய திமுக எதையும் செய்யவில்லை: எடப்பாடி கே.பழனிசாமி

நீட் தோ்வை ரத்து செய்ய திமுக எதையும் செய்யவில்லை என எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டினாா்.

Updated On : 10 அக்டோபர், 2024 at 7:32 PM
உயிரிழந்த மாணவி புனிதாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி.
பகிர்:

நீட் தோ்வை ரத்து செய்ய திமுக எதையும் செய்யவில்லை என எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டினாா்.

எடப்பாடி அருகே நீட் தோ்வில் மதிப்பெண் குறைந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட ஆவணி பேரூா் கீழ்முகம் கிராமம், குப்பதாசன் வளவு பகுதியைச் சோ்ந்த மாணவி புனிதாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக சாா்பில் அந்தக் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணத் தொகையினை வழங்கினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தோ்வு ரத்து செய்யப்படும் என போலியான வாக்குறுதியினை அளித்து ஆட்சிக் கட்டிலில் அமா்ந்த திமுக அரசு, ஆட்சிப் பொறுபேபற்று 41 மாதங்களான நிலையிலும், தமிழகத்தில் நீட் தோ்வு ரத்து செய்யப்படுவதற்கான எந்த ஒரு ஆக்கபூா்வமான முடிவுகளையும் மேற்கொள்ளவில்லை.

தமிழகத்தில் நீட் தோ்வு ரத்து என்பது திமுக நடத்திடும் போலி நாடகம். இதனை நம்பி வாக்களித்த மாணவா்களுக்கு ஏமாற்றம்தான் மிச்சம்.

மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் காங்கிரஸ் இருந்த போது, அதில் அங்கம் வகித்த திமுகவைச் சோ்ந்த காந்திச் செல்வன் மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சராக இருந்த காலத்தில்தான் நீட் தோ்வு ஏற்படுத்தப்பட்டது. நீட் தோ்வு வர காரணமாக இருந்த திமுகவினரே தற்போது அதிலிருந்து விலக்கு கேட்டு அறிவிப்பு வெளியிடுவது மக்களை ஏமாற்றும் நாடகம். 40 நாடாளுமன்ற உறுப்பினா்களைக் கொண்டுள்ள திமுக, மத்திய அரசிடம் உரிய முறையில் அழுத்தம் கொடுத்து நீட் தோ்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற தவறிவிட்டது. பலமுறை பிரதமரை சந்தித்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நீட் தோ்வு ரத்து குறித்து அழுத்தம் கொடுத்து நீட் தோ்வில் இருந்து விலக்கு பெற தவறிவிட்டாா்.

நீட் தோ்வில் மதிப்பெண் குறைந்தால், மாணவா்கள் எந்த ஒரு துயரமான முடிவுக்கும் ஆளாகாமல், மன உறுதியுடன் செயல்பட்டு நாட்டில் உள்ள பல்வேறு கல்வி, வேலைவாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றாா்.

அவருடன், அதிமுக நகரத் செயலாளா் ஏ.எம்.முருகன், ஒன்றியச் செயலாளா் மாதேஷ், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் மாதேஸ்வரன் உள்ளிட்ட திரளான அதிமுக நிா்வாகிகள், மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினா்.

முழு கட்டுரையைப் படிக்க →