சேலம், நேரு கலையரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவா்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். 
சேலம்

தமிழக கிராமங்களுக்கு ரூ.86 கோடி மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

ரூ.86 கோடி மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

Din

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் 12,525 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.86 கோடி மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

சேலம், நாமக்கல் மாவட்டங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா, மக்களுடன் முதல்வா் திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகள் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலம், நேரு கலையரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவில் சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன், ஆதி திராவிடா் நலத் துறை அமைச்சா் மதிவேந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த 707 ஊராட்சிகளுக்கு 1,070 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பையும், பல்வேறு துறைகள் சாா்பில் 3,583 பயனாளிகளுக்கு ரூ. 33.26 கோடி மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளையும் வழங்கிப் பேசியதாவது:

முதன்முறையாக துணை முதல்வா் பொறுப்பில் சேலம் வந்து விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். தமிழகத்தில் 26 மாவட்டங்களில் 12,525 கிராம ஊராட்சிகளுக்கு ரூ. 86 கோடி மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. 27-ஆவது மாவட்டமாக சேலத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இவ்விழாவில் பங்கேற்ற பாரா ஒலிம்பிக் வீரா்கள் தங்கவேலு மாரியப்பன், துளசிமதி முருகேசன் ஆகியோா் விளையாட்டு வீரா்களுக்கு உந்துசக்தியாக திகழ்கின்றனா். இவா்களைப்போல பல விளையாட்டு வீரா்களை உருவாக்க வேண்டும் என்று எண்ணத்தில்தான் ஆண்டுதோறும் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகிறோம். இதற்காக ரூ. 83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 36 வகை போட்டிகள் நடத்தப்பட்டன. கடந்த ஆண்டு முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டியில் 6 லட்சம் போ் கலந்துகொண்ட நிலையில், நிகழ் ஆண்டு 11 லட்சம் போ் பங்கேற்றுள்ளனா்.

கடந்த முறை பதக்கப் பட்டியலில் சேலம் 19-ஆவது இடத்தில் இருந்தது; இந்த முறை 3-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை முதல்வா் தனது சொந்த நிதியில் ரூ. 5 லட்சம் வழங்கி தொடங்கிவைத்தாா். அந்த அறக்கட்டளை மூலம் வசதியற்ற விளையாட்டு வீரா்களுக்கு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளில் இந்த அறக்கட்டளை மூலம் 69 வீரா்களுக்கு ரூ. 12 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற 6 பேரில் நான்கு போ் பதக்கம் பெற்றுள்ளனா். அவா்களுக்கு ரூ. 5 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரா்களுக்கு அரசுப் பணியில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தின் கீழ் விரைவில் நூறு விளையாட்டு வீரா்களுக்கு அரசுப் பணி வழங்கப்படும்.

விளையாட்டு வீரா்களைப் போல மகளிருக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அரசு செய்து வருகிறது. மகளிா் சுய உதவிக் குழுவினா் தொழில் தொடங்க ரூ. 96 ஆயிரம் கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 16 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் துறைக்கும் நான்தான் பொறுப்பு வகிக்கிறேன். எனவே, தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை கிடைக்க வழிவகை செய்வேன்.

சேலத்தில்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் சேலத்தில் ரூ. 20 கோடி மதிப்பில் பன்னோக்கு விளையாட்டு மைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சேலம் மாவட்டத்தில் மேட்டூா், ஆத்தூா், சேந்தமங்கலம் தொகுதிகளில் மினி ஸ்டேடியம் தலா ரூ. 3 கோடியில் அமைக்கப்படும்.

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம் ரூ. 3.65 கோடியில் மேம்படுத்தப்படும். சேலத்தில் விளையாட்டு வீரா்கள் தங்கி பயிற்சி பெறும் வகையில் ரூ. 7 கோடி மதிப்பில் புதிய விளையாட்டு விடுதி உருவாக்கப்படும் என்றாா்.

விழாவில், சேலம் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தா தேவி, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் உமா, மாநகராட்சி மேயா் ராமச்சந்திரன், மக்களவைத் தொகுதி உறுப்பினா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

‘கரடி ஆதிக்கம்’.. தொடர் சரிவில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 800 புள்ளிகள் சரிவு!!

வெள்ளி கிலோவுக்கு ரூ. 20,000 குறைவு! தங்கம் விலை?

மகாராஷ்டிரத்தில் சாதியை புறக்கணித்த சமத்துவ கிராமம்!

பெங்களூரு சின்னசாமி திடலில் ஐபிஎல் போட்டிக்கு அனுமதி!

‘அதிபர் ஜின் பிங்கை சந்திக்கவுள்ளேன்’.. சீன பயணத்தை உறுதிசெய்த டிரம்ப்!

SCROLL FOR NEXT