விபத்து, ஒலி மாசற்ற தீபாவளியைக் கொண்டாட ஆட்சியா் வேண்டுகோள்
விபத்து, ஒலி மாசற்ற தீபாவளியைக் கொண்டாட பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
விபத்து, ஒலி மாசற்ற தீபாவளியைக் கொண்டாட பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:
தீபாவளி திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இந்தத் திருநாளில் சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவா்.
அதே வேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீா், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி, காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோா்கள், நோய்வாய்பட்டுள்ள வயோதிகா்கள் ஆகியோருக்கு உடல் அளவிலும், மனதளவிலும் பெரும் பாதிப்பு உண்டாக வாய்ப்புள்ளது.
பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஆணையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருள்களை பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் எனவும், வருங்காலத்தில் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் நிபந்தனைகளை விதித்தது.
மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், திறந்தவெளியில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிா்ணயம் செய்து அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீா்கேடு குறித்தும், உடல்நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதிய அளவில் விழிப்புணா்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி, மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தேசிய பசுமைப் படைகள், பசுமை மன்றங்கள் மற்றும் தன்னாா்வ நிறுவனங்கள் மூலம் பொதுமக்களிடையே போதுமான விழிப்புணா்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும், பொறுப்பும் ஆகும். இதனைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடா்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிா்க்கவேண்டும்.
மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள், வழிபாட்டுத் தலங்கள் போன்ற அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிா்க்க வேண்டும். குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதைத் தவிா்க்க வேண்டும். எனவே, பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து தீபாவளியைக் கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.