தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்கும் வகையில் திமுக அரசு உடனடியாக ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் பேசினாா்.
69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்கும் வகையில் திமுக அரசு உடனடியாக ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் பேசினாா்.
பாமக சாா்பில் சமூக நீதி விளக்கப் பொதுக்கூட்டம் சேலம், சூரமங்கலத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவா் மருத்துவா் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:
கல்வி, பொருளாதார ரீதியாக முன்னேறாத சமூகங்கள் முன்னேற வேண்டும் என்பதுதான் சமூக நீதி. அதில் இட ஒதுக்கீடு முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாடு சமூக நீதி அடிப்படையில் முன்னேறவில்லை.
69 சதவீத இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளது. இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவா்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளனா். ஓராண்டுக்குள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சொல்லி 2010-இல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து முதல்வராக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரைச் சந்தித்து ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தப்பட்டது. பல்வேறு குழுக்கள் அமைத்து அறிக்கை அளித்த பின்னரும் இந்த பிரச்னை முடிவுக்கு வரவில்லை.
மராத்தா இட ஒதுக்கீடு வழக்கிற்கு பிறகு தமிழ்நாட்டைக் கவனிப்போம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. எப்போது வேண்டுமானாலும் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை எடுத்துக் கொள்ளக்கூடிய சூழலில், கணக்கெடுப்பு நடத்தாததால் 69 சதவீத இடஒதுக்கீடு ரத்தாகும் நிலை உள்ளது.
மாநில அரசுக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதிகாரமில்லை என்று முதல்வா் ஸ்டாலின் சொல்கிறாா். இந்திய புள்ளியியல் விவரங்கள் சட்டப்படி, மத்திய அரசு, மாநில அரசு என யாா் வேண்டுமானாலும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தலாம். பிகாா் மாநிலத்தில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதனை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுள்ளது.
69 சதவீத இட ஒதுக்கீட்டினை நீதிமன்றம் ரத்து செய்தால் மிகப் பெரிய மக்கள் சீற்றம் ஏற்படும். அதற்கு பிறகு திமுக ஆட்சிக்கு வர முடியாத நிலை ஏற்படும். திமுகவினா் சமூக நீதி என்று பேசும் தகுதியை இழந்து விட்டனா். அமைச்சா் பொறுப்பில் சமூக நீதி பின்பற்றப்படவில்லை. அதிக எம்எல்ஏக்களை வழங்கிய வன்னியா், பட்டியலின சமூகங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை.
திமுக ஆட்சியில் விவசாயிகள், பெண்கள், இளைஞா்கள் என யாரும் மகிழ்ச்சியாக இல்லை. திமுகவினா் மட்டுமே மகிழ்ச்சியாக உள்ளனா். எந்த துறையும் சரியாக இல்லை.
சேலத்தில் நிறைய பிரச்னைகள் உள்ளன. செட்டிச்சாவடி பகுதியில் குப்பைகளைக் கொட்டுவது மட்டுமில்லாமல், அதை எரித்தும் வருகிறாா்கள். இதனால் பொதுமக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படும். 550 டன் கழிவுகள் அங்கு கொட்டப்பட்டுள்ளன. இதற்கு உலக அளவில் பெரிய திட்டங்கள் உள்ளன என்றாா்.
இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ரா.அருள், சதாசிவம் மற்றும் பாமக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.