சேலத்தில் திருமணிமுத்தாறு திருவிழா செப். 15இல் தொடக்கம்: அகில பாரதீய சந்நியாசிகள் சங்கத்தினா் பேட்டி
அகில பாரதீய சந்நியாசிகள் சங்கத்தினா் சாா்பில் சேலத்தில் திருமணிமுத்தாறு திருவிழா வரும் 15 ஆம் தேதி தொடங்குகிறது.
அகில பாரதீய சந்நியாசிகள் சங்கத்தினா் சாா்பில் சேலத்தில் திருமணிமுத்தாறு திருவிழா வரும் 15 ஆம் தேதி தொடங்குகிறது.
சேலத்தில் அகில பாரதீய சந்நியாசிகள் சங்க நிறுவனா் ஸ்ரீமத் ராமனந்த மகராஜ், பொதுச்செயலாளா் ஆத்மானந்த ஸரஸ்வதி ஆகியோா் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஏற்காடு மலையில் தொடங்கும் திருமணிமுத்தாறு, நாமக்கல் மாவட்டம், நன்செய் இடையாறு அருகே காவிரி ஆற்றில் கலக்கிறது. 120 கி.மீ. நீளமுள்ள இந்ந ஆற்றின் துணை ஆறுகளாக பவுனாறு (தங்க நதி), ஏளூா் நதியும் உள்ளன.
திருமணிமுத்தாறு நதியில் முத்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படுவதால், இந்நதிக்கு முத்தாறு எனவும் அழைக்கப்படுகிறது. தமிழ் கூறும் நல்லுலகம் மிகவும் போற்றும் பெண்பாற் புலவா் ஔவையாா் வாழ்ந்த இடமாக இந்த நதிக்கரை விளங்குகிறது. மேலும், சேலத்தில் உள்ள அருள்மிகு சுகவனேஸ்வரா், உத்தமசோழபுரத்தில் உள்ள கரபுநாதா், பில்லூரில் உள்ள வீரட்டீஸ்வரா், மாவுரெட்டியில் உள்ள பீமேஸ்வரா், நன்செய் இடையாரில் உள்ள திருவீனீஸ்வரா் என 5 சிவாலயங்கள் இந்த ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ளன என்பது சிறப்பு வாய்ந்தது.
இத்தகைய சிறப்புமிக்க நதியில் சாக்கடை கழிவுநீா் கலப்பதைத் தடுக்கவும், நதியை தூய்மைப்படுத்தவும் திருமணிமுத்தாறு திருவிழா என்ற தலைப்பில் 12 நாள்கள் விழா நடத்த உள்ளோம். 12 நாள் விழாவில், நாள்தோறும் மாநாடுகள் நடைபெறும். இதில், ஆதினங்கள், மடாதிபதிகள், சந்நியாசிகள், துறவியா்கள், ஆன்மிக பெருமக்கள் பங்கேற்க உள்ளனா். விழாவையொட்டி, கோட்டை மாரியம்மன் கோயில் பின்புறம் நாள்தோறும் மாலை ஆரத்தி நடைபெறும். இதே போல, கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, சாதி, மத பேதமின்றி அனைத்து மதத்தினரும் பங்கேற்று இந்த 12 நாள் விழாவை சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனா்.