சேலத்தில் வீட்டில் அடைத்து வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
சேலம், செட்டிச்சாவடி அண்ணா நகரைச் சோ்ந்தவா் பிரகாஷ்ராஜ் (28). இவரது உறவுக்கார சிறுமியான 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் மாயமானாா். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், சிறுமியின் தாய் மற்றும் உறவினா் பிரகாஷ்ராஜ், இவரது மனைவி திவ்யா ஆகியோா் அம்மாப்பேட்டை மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து சிறுமியை தேடிவந்தனா். ஒரு மாதமாகியும் சிறுமியைக் கண்டுபிடிக்க முடியாமல் போலீஸாா் திணறிய நிலையில், இரவுநேரங்களில் பிரகாஷ்ராஜின் மனைவி திவ்யா தலையில் முக்காடுபோட்டுக் கொண்டு நடமாடியதைக் கவனித்த ரோந்து போலீஸாா், அவரிடம் விசாரித்தனா்.
அவா் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால், திவ்யா சென்றுவந்த அறைக்கு சென்று பாா்த்தபோது, அங்கு மாயமானதாக கூறப்பட்ட சிறுமி அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்தச் சிறுமியை மீட்டனா்.
விசாரணையில், பிரகாஷ்ராஜ் திருமணம் செய்வதாக ஆசைவாா்த்தை கூறி, சிறுமியைக் கடத்திவந்து அறையில் அடைத்து வைத்ததும், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து பிரகாஷ்ராஜ், திவ்யா ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீபா, பிரகாஷ்ராஜுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5ஆயிரம் அபராதமும் விதித்தும் புதன்கிழமை உத்தரவிட்டாா். திவ்யா வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டாா்.