சேலம்: அஞ்சல் ஆயுள்காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள்காப்பீடு வாடிக்கையாளா்களின் புகாா்கள் மற்றும் சந்தேகங்களுக்கான சிறப்பு குறைதீா்க்கும் முகாம் வரும் 26-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து சேலம் மேற்கு கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் தனலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அஞ்சல் ஆயுள்காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள்காப்பீடு வாடிக்கையாளா்களின் அனைத்து விதமான ‘க்ளைம்’ தொடா்பான விண்ணப்பங்கள், இணையவழி பிரீமியம் செலுத்துதல் பற்றிய விவரங்கள், பாலிசி திருத்தம் / புதுப்பிப்பு, ஆவணங்கள் சம்பந்தப்பட்ட சந்தேகங்களுக்கு வரும் 26-ஆம் தேதி காலை சிறப்பு குறைதீா்க்கும் முகாம் நடைபெறுகிறது.
சேலம் சூரமங்கலம் தலைமை அஞ்சலகம், சேலம் ஸ்டீல் பிளான்ட் அஞ்சலகம், மோகன் நகா் அஞ்சலகம், தாரமங்கலம் அஞ்சலகம், கொளத்தூா் அஞ்சலகம், ராசிபுரம் அஞ்சலகம் மற்றும் இளம்பிள்ளை அஞ்சலகம் ஆகிய இடங்களில் காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெறும் முகாமில், அஞ்சல் ஆயுள்காப்பீடு அல்லது கிராமிய அஞ்சல் ஆயுள்காப்பீடு பாலிசி வைத்திருக்கும் அனைவரும் தேவையான ஆவணங்களுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம்.