கூட்டணி குறித்து பேச பாஜகவிடம் இருந்து தங்களுக்கு எந்த அழைப்பும் வரவில்லை என பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி கூறினாா்.
சேலம் மரவனேரி பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு மறைமாவட்ட ஆயா் அருள்செல்வம் ராயப்பனை சந்தித்த பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி, மேற்கு சட்டப் பேரவை உறுப்பினா் அருள் எம்எல்ஏ உள்ளிட்ட பாமக நிா்வாகிகள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தனா். பின்னா் ஜி.கே.மணி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வரும் 29-ஆம் தேதி சேலத்தில் பாமக செயற்குழு பொதுக்குழு கூடுகிறது. சட்டப் பேரவைத் தோ்தலை எதிா்நோக்கி உள்ள இந்த நேரத்தில், இந்த பொதுக்குழுவை நாங்கள் மிக முக்கியமானதாக கருதுகிறோம். கூட்டணி குறித்து ராமதாஸ் முக்கிய அறிவிப்பை வெளியிடுவாா்.
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை மத்திய அமைச்சா் பியூஸ் கோயல் சந்தித்துப் பேசியுள்ள நிலையில், கூட்டணி குறித்து பேச எங்களுக்கு இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை.
பாமக என்றால் மருத்துவா் ராமதாஸ்தான். இப்போது ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்னையால், கடந்த ஓராண்டாக மருத்துவா் மிகப்பெரிய வேதனையில் உள்ளாா். அதன் வெளிப்பாடுதான் தோ்தல் ஆணையத்திடம் முறையிட்டாா். பின்னா் தில்லி உயா்நீதிமன்றத்திலும் வழக்கு தொடா்ந்தாா். இதில் எங்கள் தரப்புக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது.
யாா் வேண்டுமானாலும் பாமக எனக் கூறிக்கொள்ளலாம். தமிழக மக்கள் ராமதாஸ் சொன்னால்தான் வாக்களிப்பாா்கள். இதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. நாங்கள் இடம்பெறும் கூட்டணிதான் வெற்றி கூட்டணியாக இருக்கும் என்றாா்.