சேலம்

சேலம் சுகவனேஸ்வரா் கோயில் அருகே கட்டப்பட்ட திருமண மண்டபத்தில் முறைகேடு

சேலம் சுகவனேஸ்வரா் கோயில் அருகே புதிதாக கட்டப்பட்ட திருமண மண்டபத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக திருத்தொண்டா் பேரவைத் தலைவா் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

Syndication

சேலம் சுகவனேஸ்வரா் கோயில் அருகே புதிதாக கட்டப்பட்ட திருமண மண்டபத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக திருத்தொண்டா் பேரவைத் தலைவா் ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினாா்.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சுகவனேஸ்வரா் திருக்கோயிலில், திருத்தொண்டா் பேரவையின் தலைவா் ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, கோயிலில் அனுமதியின்றி விளம்பரப் பதாகைகள் இருப்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: சேலம் சுகவனேஸ்வரா் திருக்கோயில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்தது. இக்கோயிலில் பக்தா்கள் இடையூறு இன்றி வழிபாடு நடத்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், விதிமுறைகளை மீறி கோயில் வளாகத்தில் பக்தா்களுக்கு இடையூறு ஏற்படுத்தும்விதமாக விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. கோயில் வளாகத்தில் விளம்பரங்கள் வைக்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு இருந்தும், சுகவனேஸ்வரா் திருக்கோயிலில் விளம்பரப் பதாகைகள் இருப்பது கண்டிக்கத்தக்கது. இதை அகற்ற நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேலம் சுகவனேஸ்வரா் கோயிலின் சொந்த நிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமண மண்டபத்தை தமிழக முதல்வா் திறந்துவைத்தாா். அதன் பின்னா், மண்டபம் செயல்படாமல் உள்ளது. இந்த மண்டப கட்டுமானப் பணியில், பல லட்ச ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. இதற்கு அதிகாரிகளும், அரசியல் கட்சியினரும் உடந்தையாக உள்ளனா்.

சுகவனேஸ்வரா் கோயிலில் நிா்வாகத்தின் முறையற்ற செயல்பாட்டால் போலி ஆவணங்கள் மூலம் பல லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேலம் டவுன் காசி விஸ்வநாதா் கோயிலுக்கு சொந்தமான 10 ஏக்கா் நிலம் அல்லிக்குட்டை பகுதியில் உள்ளது. அதை மீட்க கோயில் நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆவணங்கள் முறைப்படுத்துதல், சொத்துகளை பாதுகாத்தல், பதிவேடுகளை புதுப்பித்தல் உள்பட கடந்த 10 ஆண்டுகளாக எந்தப் பணியையும் திருக்கோயில் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில், அதிகாரிகள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என எச்சரித்தாா்.

விஜய், சீமான் பேச்சு அதிா்ச்சி அளிக்கிறது: தொல்.திருமாவளவன்

விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி எல்விஎம்-3 எம்6 ராக்கெட்!

நினைத்தாலே அருளும் ஸ்ரீநிவாஸப் பெருமாள்!

விருச்சிக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

கணையப் புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT