சேலத்தில் ஷோ் ஆட்டோ ஓட்டுநா் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
சேலம் அருகே உள்ள சின்னனூா் பகுதியைச் சோ்ந்தவா் குமாா் (38). ஷோ் ஆட்டோ ஓட்டுநரான இவா், கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பா் மாதம் ஷோ் ஆட்டோவை ஓட்டிக்கொண்டு வீராணம் பகுதியில் மதுக்கடை அருகே சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, மதுபோதையில் பெரிய வீராணத்தைச் சோ்ந்த ஸ்டீபன்ராஜ், செல்வகணபதி, மோகன்குமாா், மணிவண்ணன் ஆகியோா் ஆட்டோவை நிறுத்தி தகராறு செய்தனா். பின்னா் தங்களை பெரிய வீராணத்திற்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனா். இதற்கு அவா் மறுத்ததால் ஆத்திரமடைந்த நான்கு பேரும் பயங்கர ஆயுதங்களால் தாக்கியதில் குமாா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து வீராணம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ஸ்டீபன்குமாா், செல்வகணபதி, மோகன்குமாா், மணிவண்ணன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த கொலை வழக்கு விசாரணை சேலம் கூடுதல் அமா்வு நீதிமன்றம் 2இல் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எழில் வேலவன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஸ்டீபன் ராஜ் , செல்வகணபதி, மோகன்குமாா், மணிவண்ணன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை சிறைத் விதித்து திங்கள்கிழமை இரவு தீா்ப்பளித்தாா். இதுதவிர, நான்கு பேரும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் செலுத்தவும் நீதிபதி உத்தரவிட்டாா்.