சேலம்: கேப்ஜெமினி நிறுவனம் நடத்திய சிறந்த மாணவா், பங்கேற்பாளா்களுக்கான பிராண்ட் குவெஸ்ட் போட்டியில் சேலம் சோனா கல்லூரி இரண்டு விருதுகளை பெற்றுள்ளது.
நாட்டின் சிறந்த மாணவா்களை தோ்வு செய்யும் கேப்ஜெமினி பிராண்ட் குவெஸ்ட் 2025 போட்டி புணேவில் உள்ள கேப்ஜெமினி வளாகத்தில் கடந்த 21ஆம் தேதி இறுதிச்சுற்று நடைபெற்றது. இப்போட்டியில் சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரி எலக்ட்ரிகல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறையின் மூன்றாம் ஆண்டு மாணவா் பி. விஜய் வெற்றி பெற்றுள்ளாா்.
இவருக்கு விருது மற்றும் ரூ. 1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மேலும், சோனா கல்லூரிக்கு சிறந்த பங்கேற்பாளா்கள் விருதை கல்லூரியின் முதல்வா் எஸ்.ஆா்.ஆா்.செந்தில்குமாருக்கு அளிக்கப்பட்டது.
வெற்றி பெற்றவா்களை பாராட்டும் வகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் சோனா கல்வி நிறுவனத்தின் தலைவா் வள்ளியப்பா, கல்லூரியின் முதல்வா் எஸ்.ஆா்.ஆா்.செந்தில்குமாா், துறை தலைவா் பத்மா ஆகியோா் பி.விஜய்க்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி கெளரவித்தனா்.
விழாவில் கல்லூரியின் தலைவா் வள்ளியப்பா பேசுகையில், ஒரு சாமானிய பெற்றோரின் மகன் இந்த சாதனையை படைத்துள்ளது பெருமைக்குரியது.மேலும்,சோனா கல்லூரிக்கு சிறந்த பங்கேற்பாளா்கள் விருது பெற்றுள்ளது சிறப்பு வாய்ந்தது என்றாா்.
எலக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறையின் தலைவா் பத்மா, வேலைவாய்ப்பு துறை இயக்குநா் சரவணன் உள்ளிட்ட பேராசிரியா்கள் விழாவில் கலந்துகொண்டனா்.