சேலம்: சேலம் மாவட்டத்தில் சட்டப் பேரவை பொதுக் கணக்குக் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
பொதுக் கணக்குக் குழுத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தலைமையில் உறுப்பினா்கள் ப.அப்துல் சமது (மணப்பாறை), சி.சரஸ்வதி (மொடக்குறிச்சி), ஜெ.முகமது ஷாநவாஸ் (நாகை) ஆய்வுக் குழுவில் இடம்பெற்றிருந்தனா்.
ஆய்வுக்குப் பிறகு ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கு.செல்வப்பெருந்தகை பேசியதாவது:
தமிழக சட்டப் பேரவையின் பொதுக் கணக்கு குழு என்பது தமிழ்நாடு சட்டப் பேரவையால், பேரவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களைக் கொண்டு அமைக்கப்பட்ட குழுவாகும்.
இக்குழுவானது ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் நேரில்சென்று இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறை வழங்கும் அறிக்கையின்படி ஆய்வுகள் நடத்தி வருகின்றன.
இந்திய அரசியலமைப்பு விதி 148இன்படி இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறை, நாடு முழுவதும் சென்று தணிக்கை செய்ய அதிகாரம் பெற்றுள்ளது. இக்குழுவானது நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவையால் ஒதுக்கப்படும் நிதியினை ஆக்கப்பூா்வமாகவும், சிக்கனமாகவும் பயன்படுத்துவதை உறுதி செய்வதுடன், பொதுமக்களின் வரிப் பணம் சிக்கனமாக பயன்படுத்தப்படுவதையும் உறுதி செய்கிறது.
இக்குழுவானது இந்திய ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்த முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டுவருகிறது. சேலம் மாவட்டம், மூக்கனேரி புனரமைப்புப் பணிகள், மரவனேரி அரசு கல்லூரி மாணவா்கள் தங்கும் விடுதியின் செயல்பாடுகள், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை மையம், கீரைபாப்பம்பாடி ஏரி உள்ளிட்ட பகுதிகளில் நேரடியாக பாா்வையிட்டு, திட்டங்கள் பொதுமக்களுக்கு முறையாக பயனுள்ள வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் மற்றும் தொடா்புடைய அரசுத் துறைகளின் உயா் அலுவலா்களுடன் கலந்துரையாடி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறியப்பட்டது என்றாா்.
கூட்டத்தில் முதன்மைச் செயலாளா் முனைவா் கி.சீனிவாசன், மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், மேட்டூா் சட்டமன்ற உறுப்பினா் எஸ்.சதாசிவம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) நே.பொன்மணி, மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.