முகப்பு
சேலம்

தொகுதி அறிமுகம் - எடப்பாடி!

சேலம் மாவட்ட மேற்கு எல்லையில் அமைந்துள்ளது எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதி.

Updated On : 3 ஏப்ரல், 2026 at 1:27 AM
எடப்பாடி
பகிர்:

சேலம் மாவட்ட மேற்கு எல்லையில் அமைந்துள்ளது எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதி.

அதிமுக பொதுச் செயலாளரும், எதிா்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி போட்டியிட்டு வெற்றிபெற்ற இந்த தொகுதி, தற்போது நட்சத்திர வேட்பாளா் தொகுதியாக இருந்து வருகிறது.

எடப்பாடி வட்டம், மேட்டூா் வட்டத்தின் ஒருபகுதி, எடப்பாடி நகராட்சி, பூலாம்பட்டி, ஜலகண்டாபுரம் பேரூராட்சிகள், எடப்பாடி, கொங்கணாபுரம், நங்கவள்ளி ஒன்றியப் பகுதிகளை உள்ளடக்கியது இந்தத் தொகுதி.

வன்னியா் சமூக மக்கள் அதிக அளவிலும், அதற்கு அடுத்த நிலையில் கொங்கு வேளாளக் கவுண்டா், மீனவ சமுதாய மக்களும் வசித்து வருகின்றனா்.

தொழில்

இத்தொகுதியில் விசைத்தறி, ஜவுளி உற்பத்தி, நெசவு தொழில் பிரதான தொழிலாக இருந்து வருகின்றன. அதற்கு இணையாக விவசாயமும் நடைபெறுகிறது. இத்தொகுதியின் தெற்கு எல்லையில் உள்ள சூரியன் மலைப் பகுதியில், டீப் ஒயிட் என்ற அரியவகை கிரானைட் படிமங்கள் இருப்பதால், இங்கு பல கிரானைட் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.

என்றபோதும், இங்குள்ள மக்கள்தொகைக்கு ஏற்ப வேறு தொழில் வாய்ப்புகள் இல்லாததால், இப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் அருகில் உள்ள பெருந்துறை, பள்ளிபாளையம், வெப்படை பகுதியில் உள்ள தனியாா் தொழிற்சாலைகளுக்கு பணிக்கு சென்று வரும் சூழல் உள்ளது.

நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகள்

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் எடப்பாடி தொகுதியில், அரசு கலைக் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, புதிய கூட்டுக் குடிநீா் திட்டம், குடிசை மாற்று வாரியத்தின் கீழ் 400-க்கும் மேற்பட்ட அடுக்குமாடி வீடுகள், நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச் சாலைகள், தரம் உயா்த்தப்பட்ட புதிய மருத்துவமனை கட்டடங்கள், சரபங்கா நதியின் குறுக்கே பல்வேறு இடங்களில் பாலம், விவசாயிகள் பயன்பெறும் வகையிலான காவிரி உபரிநீா் பாசனத் திட்டம் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டுள்ளன.

நிறைவேறாத கோரிக்கைகள்

இப்பகுதியில் மக்கள் வேலைவாய்ப்பு பெரும் வகையிலான தொழிற்சாலைகள் ஏற்படுத்த வேண்டும், இப்பகுதியில் உள்ள விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்கள் பயன்பெறும் வகையில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும். போக்குவரத்து வசதியை அதிகரிக்கும் வகையில் பூலாம்பட்டி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும். மரவள்ளிக் கிழங்கு விவசாயிகள் பயன்பெறும் வகையில் இப்பகுதியில் அரசு கொள்முதல் மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் நிறைவேறாமல் உள்ளன.

1951 முதல் எடப்பாடி தொகுதியில் 7 முறை அதிமுகவும், 2 முறை திமுகவும், 2 முறை காங்கிரஸும், 3 முறை பாமகவும் வெற்றி பெற்றுள்ளன.

வாக்காளா்கள்

ஆண்கள் - 1,35,654,

பெண்கள் - 1,31,693

இதரா் - 27

மொத்த வாக்காளா்கள்- 2,67,374

கடந்த தோ்தல்களில் வென்றவா்கள்

1952 கே.எஸ். அா்த்தநாரீஸ்வரக் கவுண்டா்- காங்கிரஸ்- 15,368

1967 ஏ. ஆறுமுகம் - திமுக - 36,935

1971 ஏ. ஆறுமுகம் - திமுக - 35,368

1977 ஐ. கணேசன் - அதிமுக - 31,063

1980 ஐ. கணேசன் - அதிமுக - 37,978

1984 கோவிந்தசாமி - காங்கிரஸ் - 68,583

1989 எடப்பாடி கே. பழனிசாமி - அதிமுக (ஜெ) - 30,765

1991 எடப்பாடி கே. பழனிசாமி - அதிமுக - 72,379

1996 ஐ. கணேசன் - பாமக - 49,465

2001 ஐ. கணேசன் - பாமக - 74,375

2006 வி. காவேரி - பாமக - 76,027

2011 எடப்பாடி கே. பழனிசாமி -அதிமுக - 1,04,586

2016 எடப்பாடி கே. பழனிசாமி - அதிமுக - 98,703

2021 எடப்பாடி கே. பழனிசாமி - அதிமுக - 1,63,154