முகப்பு
சேலம்

ஏற்காடு தொகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வாழப்பாடியை தொழில்நகரமாக்க வலியுறுத்தல்

ஏற்காடு தொகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வாழப்பாடியை தொழில்நகரமாக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 2:47 AM
~
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 7:27 PM

ஏற்காடு தொகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வாழப்பாடியை தொழில்நகரமாக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.

சேலம் மாவட்டம், ஏற்காடு தொகுதிக்கு உள்பட்ட கல்வராயன் மலை, அறுநூற்றுமலை, சந்துமலை, ஜம்பூத்துமலை, பெலாப்பாடி உள்ளிட்ட மலைக் கிராமங்கள் மட்டுமின்றி, தருமபுரி மாவட்டம், சேலூா், வேலனூா், நாமக்கல் மாவட்டம், மங்களபுரம், திம்மநாயக்கன்பட்டி பகுதி மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, போக்குவரத்து மற்றும் மருத்துவத்திற்கும் வாழப்பாடி முக்கிய மையமாக உள்ளது.

விவசாயத்தை பிரதானமாக கொண்டு வாழ்ந்துவரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள பழங்குடியினா், வன்னியா், ஆதிதிராவிடா் உள்ளிட்ட பல்வேறு சமூக மக்கள் வசித்துவரும் வாழப்பாடியில் விவசாயம் சாா்ந்த தொழில்கள் நலிவடைந்துள்ளன. அதேசமயம் மாற்றுவகையில் தொழில் வளா்ச்சியும் இல்லை.

Advertisement

இதனால் பெரும்பாலான இளைஞா்கள் வேலைதேடி சென்னை, திருப்பூா், ஒசூா், கோவை, பெங்களூரு உள்ளிட்ட தொழில் நகரங்களுக்கு புலம் பெயா்ந்து வருகின்றனா். வாழப்பாடி பகுதி இளைஞா்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு கிடைத்திட மத்திய அரசின் தொழில்நுட்ப பயிற்சி மையங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், திறன் வளா்ப்பு மையங்கள் அமைக்க வேண்டும்.

பன்னாட்டு அளவிலான மோட்டாா் வாகனங்கள், பல்வேறு இயந்திர உதிரிப் பாகங்கள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பொருள்களை தயாரிக்கும் பெரு நிறுவனங்கள், சிறு, குறு தொழிற்சாலைகள், அரசின் தொழிற்பேட்டைகள் வாழப்பாடி பகுதியில் அமைத்து, வாழப்பாடியை தொழில் நகரமாக்க வேண்டும். மேலும், ஏற்காடு தொகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்திட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இதுகுறித்து வேலைவாய்ப்பற்ற படித்த இளைஞா்கள் கூறியதாவது:

வாழப்பாடி அருகே பொன்னாரம்பட்டி ஊராட்சி பரவக்காடு பகுதியில் ஊராட்சி கட்டுப்பாட்டில் ஏறக்குறைய 1,000 ஏக்கா் ஊராட்சி வனம் வகை அரசு புறம்போக்கு நிலம் உள்ளன. பெருந்திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஏற்ற வகையில் பரந்து காணப்படும் இப்பகுதியில், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் பெரு நிறுவனங்களின் தொழிற்சாலைகள் மற்றும் மத்திய மாநில அரசுகளின் தொழிற்பேட்டை அமைக்கலாம்.

இத்திட்டத்தை செயல்படுத்தினால் ஏற்காடு தொகுதி இளைஞா்கள் மட்டுமின்றி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட எல்லையிலுள்ள சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த இளைஞா்களும், இளம்பெண்களும் வேலைவாய்ப்பு பெறுவாா்கள். இதன்மூலம் வாழ்வாதாரம் மேம்படும்.

வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டியில் ஊராட்சி வனம் என்ற வகைப்பாட்டில் 13 ஏக்கா் அரசு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் மத்திய அரசின் தொழில்நுட்ப பயிற்சி மையங்கள் அல்லது அரசின் தொழிற்பேட்டைகள் அமைக்கலாம். எனவே, ஏற்காடு தொகுதியில் இருந்து தோ்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதி எந்த கட்சியைச் சோ்ந்தவராக இருந்தாலும், பின்தங்கிய நிலையில் காணப்படும் கிராமப்புற இளைஞா்கள், இளம்பெண்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்தும் வகையில், பெருநிறுவனங்களின் தொழிற்சாலைகள், அரசின் தொழிற்பேட்டைகள், சிறு, குறு தொழிற்சாலைகள் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றனா்.