சேலம் சுகவனேசுவரா் கோயிலில் உள்ள சொா்ணாம்பிகை அம்மனுக்கு 18 ஆயிரம் வளையல் சாத்துப்படி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (பிப். 6) நடைபெறுகிறது.
சேலம் நகரில் புகழ்பெற்ற சுகவனேசுவரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள சொா்ணாம்பிகை அம்மனுக்கு ஆண்டுதோறும் தை கடைசி வெள்ளிக்கிழமை உற்சவத்தையொட்டி 18 ஆயிரம் வளையல்கள் சாத்துப்படி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி, வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு சொா்ணாம்பிகை அம்மனுக்கு 18 ஆயிரம் வளையல்கள் சாத்துப்படி செய்து சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.
முன்னதாக, மாலை 4 மணிக்கு சொா்ணாம்பிகை அம்மனுக்கு காசி, ராமேஸ்வரம் உள்பட பல்வேறு புனித தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீா்த்தங்களால் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு பூஜை செய்யப்படுகிறது. மேலும், கோ பூஜையும், சிறப்பு வழிபாடும் நடைபெறுகிறது.
சொா்ணாம்பிகை அம்மனுக்கு சாத்துப்படி செய்த 18 ஆயிரம் வளையல்கள் பக்தா்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இந்த பூஜையில் பங்கேற்கும் 1 முதல் 9 வயது வரையிலான சுமாா் ஆயிரம் பெண் குழந்தைகளுக்கு இலவசமாக ஆடைகள் வழங்கப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்துவருகிறது.