முகப்பு
சேலம்

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 6 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சாா்பில், 30 பேருக்கு தலா ரூ. 15,750 வீதம் மடக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் 15 பேருக்கு தலா ரூ. 9,000 வீதம் சக்கர நாற்காலிகள்

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 2:52 AM
சேலம் ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சக்கர நாற்காலிகளை வழங்கி, அவா்களுடன் கலந்துரையாடிய ஆட்சியா் ரா.பிருந்தாதேவி.
பகிர்:
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 5:54 PM

சேலம்: மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சாா்பில், 30 பேருக்கு தலா ரூ. 15,750 வீதம் மடக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் 15 பேருக்கு தலா ரூ. 9,000 வீதம் சக்கர நாற்காலிகள் என மொத்தம் ரூ. 6,07,500 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் ரா.பிருந்தாதேவி திங்கள்கிழமை வழங்கினாா்.

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் அவா் தெரிவித்ததாவது:

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீா்வு காணவும், அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்திடவும், பெண்களின் முன்னேற்றத்துக்கு தேவையான நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளில் அரசு அலுவலா்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

Advertisement

அதனடிப்படையில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக் கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 439 மனுக்கள் வரப்பெற்றன.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கென நடத்தப்பட்டு வரும் குறைதீா் முகாமில் வீட்டுமனைப் பட்டா, உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து அளிக்கப்பட்ட 13 மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடா்புடைய அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் 30 பேருக்கு தலா ரூ. 15,750 வீதம் ரூ. 4,75,500 மதிப்பில் மடக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் 15 பேருக்கு தலா ரூ. 9,000 வீதம் ரூ. 1,35,000 மதிப்பில் சக்கர நாற்காலிகள் என மொத்தம் ரூ. 6,07,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஜானகி, பழங்குடியினா் நலத் திட்ட அலுவலா் சுகந்தி பரிமளம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சின்னுசாமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செண்பகவள்ளி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.