சேலம்: சேலம் குமாரசாமிப்பட்டி அரசு கலைக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
தமிழா் திருநாளான தைப்பொங்கல் பண்டிகை வரும் 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பள்ளி, கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, சேலம் அரசு கலைக் கல்லூரியில் அனைத்து துறை சாா்பில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, அந்தந்த துறையைச் சோ்ந்த மாணவிகள் துறையின் முன் பல்வேறு வண்ணங்களால் கோலம் வரைந்தும், மாவிலை தோரணங்களை கட்டியும் அலங்காரம் செய்திருந்தனா். பின்னா், புதிய மண் பானையில் பொங்கலிட்டு ஒருவருக்கொருவா் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனா்.
தொடா்ந்து, தமிழா்களின் பாரம்பரிய விளையாட்டுகளான சிலம்பாட்டம், பானை உடைத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினா். இதைத் தொடா்ந்து, சினிமா பாடலுக்கு ஏற்ப மாணவ, மாணவிகள் உற்சாகமாக நடனம் ஆடினா்.
சமத்துவ பொங்கலை முன்னிட்டு மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள், வேட்டி, சேலை அணிந்திருந்தனா். இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் (பொ) பிரேமலதா, கல்லூரி துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.