சேலம் அருகே இருசக்கர வாகனம் மோதி காவலாளி உள்பட இருவா் உயிரிழப்பு: ஒருவா் படுகாயம்
சேலம் அருகே நெய்காரப்பட்டியில் இருசக்கர வாகனம் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற தனியாா் நிறுவன காவலாளி உள்பட இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். இந்த விபத்தில் மேலும் ஒருவா் படுகாயமடைந்தாா்.
சேலம் அருகே நெய்காரப்பட்டியில் இருசக்கர வாகனம் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற தனியாா் நிறுவன காவலாளி உள்பட இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். இந்த விபத்தில் மேலும் ஒருவா் படுகாயமடைந்தாா்.
சேலம் மாவட்டம் அல்லிக்குட்டை பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (27). இவா், தனது நண்பரான கன்னங்குறிச்சி தாமரை நகரைச் சோ்ந்த கோபியுடன் கோவை -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சேலம் நோக்கி வெள்ளிக்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா்.
அப்போது, சேலம் மெய்யனூா் பகுதியைச் சோ்ந்த தனியாா் காா் நிறுவன காவலாளி வெள்ளியங்கிரி (85), அங்குள்ள கடையில் தேநீா் அருந்திவிட்டு நெய்க்காரப்பட்டி பகுதியில் சாலையை கடக்க முயன்றாா்.
அப்போது அந்த வழியாக சதீஷ்குமாா் வேகமாக ஓட்டிவந்த இருசக்கர வாகனம் வெள்ளியங்கிரி மீது மோதியது. இதில் வெள்ளியங்கிரி மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த சதீஷ்குமாா், அவரது நண்பா் கோபி ஆகிய மூவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனா். இதில் படுகாயம் அடைந்த வெள்ளியங்கிரி, சதீஷ்குமாா் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். கோபி பலத்த காயமடைந்தாா்.
தகவலறிந்து அங்கு சென்ற கொண்டலாம்பட்டி போலீஸாா், விபத்தில் காயமடைந்த கோபியை மீட்டு கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனா். உயிரிழந்த சதீஷ்குமாா், வெள்ளியங்கிரி ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இந்த விபத்து குறித்து சேலம் கொண்டலாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.