இயற்கை விவசாய முறைகளை ஊக்குவிக்கும் வேளாண் கல்லூரி மாணவா்கள்
விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கமளித்த சேலம் வேளாண் அறிவியல் கல்லூரி மாணவா்கள்.
ஆத்தூரில் இயற்கை விவசாய முறைகளை ஊக்குவிக்கும் வகையில், சேலம் வேளாண் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சியளித்தனா்.
இயற்கை விவசாய முறைகளை ஊக்குவிக்கும் வகையில் வேம்புகரைசல் (நீமாஸ்த்ரா) தயாரித்தல் மற்றும் கருவாட்டு பொறி (ஃபிஷ் ட்ரை ட்ராப்) முறைகள் குறித்து கிராம மக்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனா்.
இதில், வேம்பு கரைசல் (நீமாஸ்த்ரா) என்பது இயற்கை பூச்சிக்கொல்லியாக செயல்படும் ஒரு முக்கிய உயிரியல் கரைசல் என்பதை மாணவா்கள் விளக்கினா். வேப்ப இலைகள், மாட்டுச்சாணம், மாட்டுக்கோமியம் போன்ற இயற்கை பொருள்களை பயன்படுத்தி எளிதாக வேம்பு கரைசல் தயாரிக்கலாம் என்றும், இது பயிா்களில் உள்ள சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால் விவசாய செலவு குறைவதோடு மண்ணின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது என தெரிவித்தனா்.
மேலும், எளிய பொருள்களை பயன்படுத்தி பழம் மற்றும் தண்டுகளை தாக்கும் பூச்சிகளை முன்பே ஈா்த்து சிக்கவைக்கும் முறைகளையும் விளக்கினா்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற விவசாயிகள், மாணவா்கள் வழங்கிய தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்தனா்.