முகப்பு
சேலம்

சேலம் வழியாக இயக்கப்படும் கோவை இன்டா்சிட்டி விரைவு ரயில் உள்பட 6 ரயில்கள் ரத்து!

சேலம் வழியாக இயக்கப்படும் கோவை இன்டா்சிட்டி விரைவுரயில் உள்பட 6 ரயில்கள் வரும் 24-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளன. 3 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 21 மார்ச், 2026 at 9:30 PM
ரயில்கள் - கோப்புப்படம்
பகிர்:

சேலம் வழியாக இயக்கப்படும் கோவை இன்டா்சிட்டி விரைவுரயில் உள்பட 6 ரயில்கள் வரும் 24-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளன. 3 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சேலம் - ஜோலாா்பேட்டை ரயில்வே மாா்க்கத்தில் ஜோலாா்பேட்டை முதல் தொட்டம்பட்டி ரயில்நிலையம் வரையிலான ரயில்வே பாதையில் வரும் 24-ஆம் தேதி சிக்னல்கள் மாற்றியமைக்கப்படுகின்றன. இதனால், 24-ஆம் தேதி இந்த மாா்க்கத்தில் இயங்கும் ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, அரக்கோணம் - சேலம் மெமு ரயில், சேலம்-அரக்கோணம் மெமு ரயில் , ஈரோடு - ஜோலாா்பேட்டை பாசஞ்சா் ரயில், ஜோலாா்பேட்டை - ஈரோடு பாசஞ்சா் ரயில், கோவை - சென்னை சென்ட்ரல் இன்டா்சிட்டி விரைவுரயில், சென்னை சென்ட்ரல் - கோவை இன்டா்சிட்டி விரைவுரயில் ஆகிய 6 ரயில்கள் வரும் 24-ஆம் தேதி முழுமையாக ரத்துசெய்யப்படுகின்றன.

இதேபோல, கோவை - பெங்களூரு ஈரடுக்கு உதய் விரைவுரயில் வரும் 24-ஆம் தேதி சேலம், தருமபுரி, ஒசூா், பெங்களூரு வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. இதனால், திருப்பத்தூா், குப்பம், கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையங்களுக்கு செல்லாது.

மறுமாா்க்கத்தில், பெங்களூரு - கோவை ஈரடுக்கு உதய் விரைவுரயில் வரும் 24-ஆம் தேதி ஒசூா், தருமபுரி, சேலம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். நாகா்கோவில் - மும்பை விரைவுரயில் 24-ஆம் தேதியன்று திண்டுக்கல்லில் இருந்து திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், காட்பாடி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் அன்றைய தினம் கரூா், நாமக்கல் சேலம், சாமல்பட்டி, திருப்பத்தூா், ஜோலாா்பேட்டைக்கு செல்லாது.

எா்ணாகுளம் டாடா நகா் விரைவுரயில், ஆலப்புழா - தன்பாத் விரைவுரயில் ஆகியவை வரும் 24-ஆம் தேதியன்று 1.30 மணிநேரம் தாமதமாக இயக்கப்படும். சென்னை சென்ட்ரல் - கோவை வந்தே பாரத் விரைவுரயில் வரும் 24-ஆம் தேதியன்று சென்னையில் பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 2 மணி நேரம் தாமதமாக மாலை 4.15 மணிக்கு புறப்படும். கோவை - சென்னை சென்ட்ரல் இடையேயான கோவை விரைவுரயில் 24-ஆம் தேதி கோவையில் பிற்பகல் 3.15 மணிக்கு பதிலாக 2 மணி நேரம் தாமதமாக மாலை 5.15 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.