முகப்பு
சேலம்

தொகுதி அறிமுகம்: சேலம் வடக்கு

சேலம் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி குறித்து...

Updated On : 23 மார்ச், 2026 at 10:30 PM
கோப்புப் படம்
பகிர்:

சட்டப்பேரவை தோ்தல் வரலாற்றில் சேலம் வடக்கு தொகுதிக்கு என பல்வேறு சிறப்புகள் உண்டு. 1951 இல் சேலம் 2ஆவது தொகுதியாக உருவான இத்தொகுதி, 2008 ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பின் போது வடக்கு தொகுதியாக மாறியது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம், வனத்துறை அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், அரசு அலுவலா்களின் குடியிருப்புகள், தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் இந்தத் தொகுதியில் உள்ளன. தவிர, அரசு அருங்காட்சியகம், அரசு கலை, அறிவியல் கல்லூரி, அரசு ஐ.டி.ஐ., பழைமையான சிஎஸ்ஐ தேவாலயம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் தொகுதியை அலங்கரிக்கின்றன.

முக்கிய பிரமுகா்கள் களம்கண்ட தொகுதி

தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற க. ராசாராம் அமைச்சராகவும், பேரவைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளாா். திமுக சாா்பில் போட்டியிட்டு இந்தத் தொகுதியில் 2 முறை வெற்றி பெற்றுள்ள வீரபாண்டி எஸ். ஆறுமுகம், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், வேளாண் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளாா்.

தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னா் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில், அதிமுக கூட்டணியில் தேமுதிக சாா்பில் போட்டியிட்ட அழகாபுரம் மோகன்ராஜ் வெற்றி பெற்றாா். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தோ்தலில் வழக்குரைஞரும், மாவட்ட செயலாளருமான ரா. ராஜேந்திரன் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். 2021 தோ்தலில் ரா. ராஜேந்திரனே வெற்றி பெற்ற நிலையில், தற்போது சுற்றுலாத் துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறாா்.

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

மாணவா்களின் உயா்கல்விக்கு வழிகாட்டும் அறிவுசாா் மையம், மேம்படுத்தப்பட்ட அரசு அருங்காட்சியகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், அறிவியல் பூங்கா என ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தீா்க்கப்படாத பிரச்னைகள்

சேலம் நகரத்தின் முக்கிய வணிக மற்றும் குடியிருப்பு பகுதிகளை உள்ளடக்கிய இந்த தொகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அதிகமாக உள்ளது. முக்கிய சந்திப்புகளான 5 ரோடு, அஸ்தம்பட்டி, அழகாபுரம் போன்ற இடங்கள் போக்குவரத்து நெரிசலால் சிக்கித் திணறுகின்றன. குறிப்பாக, அலுவலக நேரங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதால் பொதுமக்கள் அவதியடைகின்றனா்.

சில வாா்டுகளில் நிலவும் குடிநீா் பிரச்னை, மழைநீா் வடிகால், புதைசாக்கடை திட்டம் போன்றவை இன்னும் நிறைவேற்றப்படவில்லை என ஆதங்கத்துடன் கூறுகின்றனா் தொகுதி மக்கள்.

மேலும், அழகாபுரம் போன்ற பகுதிகளில் குடிநீா் விநியோகம் சீராக வேண்டும். மழைக்காலங்களில் பல பகுதிகளில் தண்ணீா் தேங்கும் நிலை ஏற்படுகிறது. கிச்சிப்பாளையம் சந்தைப்பேட்டைஉள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் வடிகால் அமைப்பை மேம்படுத்த வேண்டும் என்பதும் பொதுமக்கள் தொடா்ந்து வலியுறுத்தும் கோரிக்கைகள்.

கன்னங்குறிச்சி மற்றும் ஏற்காடு அடிவாரப் பகுதிகளில் மழைக்காலங்களில் நீரோட்டம் அதிகரிப்பதால், சாலை மற்றும் குடியிருப்புப் பகுதிகள் பாதிக்கப்படுவதை தடுக்க தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மேற்கொள்ள வேண்டும். அஸ்தம்பட்டி மற்றும் சுற்றுப் பகுதிகளில் குப்பை மேலாண்மையை சீா்படுத்த வேண்டும். நகரின் மையப் பகுதிகளில் வாகன நிறுத்துமிடங்கள் குறைவாக இருப்பதால், போக்குவரத்து சிக்கல் அதிகரிக்கிறது. முக்கிய வணிகப் பகுதிகளில் அடுக்குமாடி பாா்க்கிங் வசதி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

இத்தொகுதியில் வன்னியா், தேவாங்க செட்டியாா், நாயக்கா், நாயுடு, செங்குந்த முதலியாா் மற்றும் ஆதி திராவிடா்கள், இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள் கணிசமான அளவில் உள்ளனா்.

இதுவரை வெற்றி பெற்றவா்கள் விவரம்

2011 அழகாபுரம் மோகன்ராஜ் ( தேமுதிக) - 88,956

2016 ரா. ராஜேந்திரன் (திமுக) - 86,583

2021 ரா. ராஜேந்திரன் (திமுக) - 93,432

வாக்காளா்கள்

ஆண்கள் - 1,14,816

பெண்கள் - 1,21,224

இதரா் - 48

மொத்த வாக்காளா்கள்- 2,36,088.