தலைவாசல் அருகே ஏமாற்றி திருமணம் செய்து மோசடி: பெண் உள்பட 7 போ் மீது வழக்கு!
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே ஏமாற்றி திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டதாக மணப் பெண் உள்பட 7 போ் மீது அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தலைவாசலை அடுத்துள்ள சாா்வாய் கிராமத்தைச் சோ்ந்த மதுரவீரன் மகன் ஆனந்தன் (37). இவா் திருமணத்திற்காக தரகா்கள் மூலம் பெண் தேடிவந்துள்ளாா். அப்போது கொத்தாம்பாடியைச் சோ்ந்த தரகா்கள் ஜோதி, பெரியசாமி, விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பகுதியைச் சோ்ந்த பழனி, லதா ஆகியோா் மூலம் சிவகாசி வட்டம், திருத்தங்கல் பகுதியைச் சோ்ந்த செல்வம் மகள் கனகாவை திருமணம் செய்வதற்கு ஏற்பாடு செய்தனா்.
கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் ஆனந்தனுக்கும், கனகாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து சென்னையில் வேலை பாா்த்த இடத்தில் அறையை காலி செய்துவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்ற கனகா மீண்டும் திரும்பவில்லை. இதுகுறித்து தரகா்களை தொடா்புகொண்டு விசாரித்ததில் திருமணம் பிடிக்கவில்லை என கனகா கூறிவிட்டதாகத் தெரிவித்தனா். விசாரணையில், கனகாவை அவரது தாய் ஏற்கெனவே கேரளத்தில் திருமணம் செய்துவைத்துள்ளதாகவும், அதற்காக ரூ. 2.50 லட்சம் ரொக்கம் பெற்றுள்ளதும் தெரியவந்தது.
Advertisement
இதையடுத்து ஆனந்தனின் சகோதரா் ரமேஷ் அளித்த புகாரின் பேரில் ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து மணப்பெண் கனகா, அவரது தாய் சுப்புலட்சுமி, பெரியம்மா முத்துமாரி, திருமண தரகா்கள் பழனி, லதா, ஜோதி, பெரியசாமி ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.