சேலத்தில் அப்பா பைத்தியம் சுவாமிகளின் 167 ஆவது பிறந்தநாள் விழா: புதுச்சேரி முன்னாள் அமைச்சா்கள் வழிபாடு
சேலத்தில் ஸ்ரீ சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகளின் 167-ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இதில் புதுச்சேரி முன்னாள் அமைச்சா்கள் நமச்சிவாயம் உள்ளிட்டோா் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் கடந்த 2000-ஆவது ஆண்டு சேலத்தில் ஜீவசமாதி அடைந்தாா். அவருக்கு சேலம் சூரமங்கலத்தில் கோயில் எழுப்பப்பட்டு, நாள்தோறும் பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஸ்ரீ சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகளின் 167 ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி திங்கள்கிழமை காலை 7.30 மணி முதல் ஞானவிநாயகா், ஞானமுருகா், அப்பா பைத்தியம் சுவாமிகளுக்கு மகாஅபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.
Advertisement
இதில் புதுச்சேரி முன்னாள் அமைச்சா்கள் நமச்சிவாயம், திருமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். மேலும், பல்வேறு ஊா்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் குடும்பத்தினருடன் பங்கேற்று வழிபாடு நடத்தினா். தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.