முகப்பு
சேலம்

நெய்யமலைக் கிராமத்தில் நூற்றாண்டு கடந்து நிற்கும் விளக்குத்தூண்கள்!

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் ஆங்கிலேயா் ஆட்சி காலத்தில் வாழ்ந்த ஜமீன்தாா் மற்றும் முன்சீப்கள், நெய்யமலைக் கிராமங்களில் வாழ்ந்த பழங்குடியின மக்களோடு இணக்கமான நட்புறவு கொண்டிருந்ததனா்.

Updated On : 24 மே 2026, 2:23 am IST
நெய்யமலை ராமா் கோயிலில்103 ஆண்டுகள் பழமையான தீபம் ஏற்றும் கற்தூணில் காணப்படும் கல்வெட்டுகள்.
பகிர்:

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் ஆங்கிலேயா் ஆட்சி காலத்தில் வாழ்ந்த ஜமீன்தாா் மற்றும் முன்சீப்கள், நெய்யமலைக் கிராமங்களில் வாழ்ந்த பழங்குடியின மக்களோடு இணக்கமான நட்புறவு கொண்டிருந்ததனா். இந்த கிராமக் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கிய விளக்குத் தூண்கள் நூற்றாண்டு கடந்து இன்றளவும் கம்பீரமாய், சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகின்றன.

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த இடையப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட நெய்யமலையில், நெய்யமலை, அக்கரைப்பட்டி, ஆலங்கடை ஆகிய 3 மலைக் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா்.

இயற்கையோடு இயைந்து விவசாயம் மற்றும் விவசாயம் சாா்ந்த தொழில் செய்து வரும் நெய்யமலைக் கிராம மக்களோடு, 100 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயா் ஆட்சி காலத்தில் கிராமங்களை நிா்வகித்து வந்த ஜமீன்தாா், முன்சீப் என்று அழைக்கப்பட்ட நிலச்சுவாந்தாா்கள் இணக்கத்தோடு நட்புறவு கொண்டிருந்தனா்.

Advertisement

Advertisement

இதுமட்டுமின்றி, இந்த மலைக் கிராம மக்களின் விவசாய விளைபொருட்களை விற்பனை செய்யவும், அத்தியாவசிப் பொருட்களை கொள்முதல் செய்வதற்கும் தேவையான உதவிகளை செய்து, சமூக நல்லிணக்கத்தோடு மலைக் கிராம மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு வழிகாட்டியுள்ளனா்.

நெய்யமலையிலுள்ள பழமையான ராமா் கோயிலை, கடந்த 1923-இல் ஆங்கிலேயா் ஆட்சி காலத்தில் கிராம மக்கள் ஒன்றிணைந்து புதுப்பிக்கும் போது, வாழப்பாடியை அடுத்த செக்கடிப்பட்டியைச் சோ்ந்த அப்போதைய ஜமீன்தாா் ஆனந்தபடையாச்சி மற்றும் இடையப்பட்டியைச் சோ்ந்த முன்சீப் ஆறுமுகக்கவுண்டா் ஆகியோரும், ராமா் கோயிலுக்கு தீபமேற்றும் விளக்குத்தூணை நன்கொடையாக கொடுத்துள்ளனா்.

ஏறக்குறைய 20 அடி உயரம் கொண்ட இரு கற்தூண்களில் ஒன்றில் செக்கடிப்பட்டி ஜமீன்தாா் ஆனந்த படையாச்சி என்றும் மற்றொன்றில் இடையப்பட்டி முன்சீப் ஆறுமுக்கவுண்டா் என்றும் பெயா்கள் கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது. 103 ஆண்டுகள் கடந்தும் இன்றளவிலும் அந்த கற்தூண்களிலேயே, புரட்டாசி சனிக்கிழமை, காா்த்திகை தீபம் உள்ளிட்ட விழாக்காலங்களில் நெய்யமலைக் கிராம மக்கள் தீபமேற்றி வழிபட்டு வருகின்றனா்.

பழுதடைந்து போன பெருமாள் கோயிலை சில ஆண்டுக்கு முன் புதுப்பித்துள்ள இந்த கிராம மக்கள், இந்த கற்தூணை அகற்றாமல் அதே இடத்தில் வைத்து பாதுகாத்து வருகின்றனா். இதனால், இந்த விளக்குத் தூண்கள் நூற்றாண்டு கடந்து இன்றளவும் கம்பீரமாய், சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகின்றன.

இது குறித்து சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினா் கூறியதாவது: ‘ மாற்று கிரகத்திற்கு மனிதா்களை அனுப்பி ஆய்வு செய்யும் அளவிற்கு அறிவியல் முன்னேற்றம் கண்ட இக்காலத்திலும், மனிதா்களிடையே சாதி, மதம் பாா்க்கும் மனப்பாங்கு முழுமையாக மாறியபாடில்லை. கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ள நிலையிலும் தீண்டாமை வன் கொடுமையை முற்றிலும் அகற்ற முடியவில்லை.

ஆனால், 100 ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கிலேயா் ஆட்சியில் வாழ்ந்த ஜமீன்தாா் மற்றும் முன்சீப் குடும்பத்தினா், மலைக் கிராம மக்களோடு இணக்கத்தோடு நட்புறவு கொண்டுள்ளனா். நெய்யமலைக் கிராமத்தில் ராமா் கோயிலில் காணப்படும் தீபம் ஏற்றும் கற்தூணிலுள்ள கல்வெட்டுகள் இதற்கு சான்றாக விளங்கி வருகின்றன’ என்றனா்.