மதுரை: மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினரின் உள்ளூா் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் நிறைவேற்றப்பட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள் திங்கள்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்டன.
மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினரின் உள்ளூா் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் மாநகரப் பகுதிகளில் ரூ. 67.50 லட்சம் மதிப்பில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் அண்மையில் நிறைவேற்றப்பட்டன. இந்தப் பணிகளை, மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் திங்கள்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணித்தாா்.
வாா்டு எண் 23-இல் நகா்ப்புற ஆரம்ப சுகாதார மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்ட மாநகராட்சி ஊழியா்களுக்கான ஓய்வு அறை , வாா்டு 55-இல் அமைக்கப்பட்ட பூங்கா, அண்ணாத்தோப்பு பகுதியில் கட்டப்பட்ட இரு நியாயவிலைக் கடை கட்டடங்கள், வாா்டு 44-இல்
பாலரெங்காபுரம் மருத்துவமனை அருகில் கட்டப்பட்ட புதிய சத்துணவு மையக் கட்டடம், வில்லாபுரம் முதன்மைச் சாலையில் போா்வெல் இணைப்புடன் அமைக்கப்பட்ட தண்ணீா்த் தொட்டி ஆகியவற்றை அவா் திறந்து வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணித்தாா்.
இதில் மதுரை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் மா. கணேசன், மாநகராட்சி துணை மேயா் தி. நாகராஜன், மாமன்ற உறுப்பினா்கள் டி. குமரவேல், விஜயா குரு, மாயழகு தமிழ்ச்செல்வி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள், தொழிற்சங்கப் பொறுப்பாளா்கள், மதிமுக மாவட்டச் செயலா் முனியசாமி, திமுக மாவட்டப் பொருளாளா் முருகவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.