முகப்பு
திண்டுக்கல்

பழனி அருகே ரயில்வே கடவுப் பாதையில் நின்ற வேன்: ரயிலை நிறுத்தியதால் குழந்தைகள் உயிர் தப்பினர்

பழனியருகே ஆயக்குடி பொன்னாபுரத்தில் ஆளில்லா ரயில்வே கடவுப்பாதையில் பள்ளிவேன் குறுக்கே வந்த நிலையில் ரயில் ஓட்டுநர் 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:19 PM
பகிர்:

பழனியருகே ஆயக்குடி பொன்னாபுரத்தில் ஆளில்லா ரயில்வே கடவுப்பாதையில் பள்ளிவேன் குறுக்கே வந்த நிலையில் ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு குழந்தைகள் உயிர் தப்பினர். 

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பொன்னாபுரத்தில் ஆளில்லா ரயில்வே கடவுப்பாதை உள்ளது. இந்த வழியில் நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் ஏராளமான வாகனங்கள் ரயில்வே தண்டவாளத்தை கடப்பதால் இங்கு ஆட்கள் நியமிக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அதற்கான ஏற்பாடுகள் ஏதும் செய்யப்படவில்லை. இந்நிலையில் வியாழக்கிழமை காலை தனியார் பள்ளி வேன் ஒன்று குழந்தைகளை ஏற்றிக்கொண்டு ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளது. 

வேகத்தடையைக் கடந்து தண்டவாளம் அருகே சென்றபோது சரக்கு ரயில் வருவதை பார்த்த வேன் ஓட்டுநர் பயந்து வேனை நிறுத்தி விட்டு குதித்து ஓடிவிட்டார். அதே வேளை கடவுப்பாதையில் வேன் நிற்பதை பார்த்த ரயில் ஓட்டுநர் சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தினார். இதனால் வேனில் பயணம் செய்த குழந்தைகள் உயிர்தப்பினர். 

இதையடுத்து அப்பகுதியில் குவிந்த பொதுமக்கள் வேனை தண்டவாள பகுதியில் இருந்து கீழே தள்ளி இறக்கினர். இதனால் சரக்கு ரயில் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக கிளம்பி சென்றது. ரயிலை நிறுத்தி விபத்தை தவிர்த்த ரயில் ஓட்டுநரை பொதுமக்கள் பாராட்டினர். ஆனால் இதுகுறித்து எந்த புகாரும் வராததால் ரயில்வே போலீஸார் வழக்குப் பதியவில்லை என்றும் புகார் வந்தால் பள்ளி நிர்வாகம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்வோம் என தெரிவித்தனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →