வத்தலகுண்டு புனித தோமையார் ஆலய திருவிழா நிறைவு
வத்தலகுண்டு புனித தோமையார் ஆலயத்தில் திருவிழா ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவுற்றது.
வத்தலகுண்டு புனித தோமையார் ஆலயத்தில் திருவிழா ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவுற்றது.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு புனித தோமையார் ஆலய பெருவிழா கடந்த ஜூன் 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 9 நாள்கள் நடைபெற்ற இத் திருவிழாக்கு, வட்டாரப் பங்குத்தந்தை சேவியர் தலைமை வகித்தார். அருட்தந்தை ரெக்ஸ் பீட்டர், உதவி பங்குத் தந்தை பிரபு ஆகியோர் முன்னிலையில் சிறப்புத் திருப்பலி, ஆராதனை, வழிபாடு நடைபெற்று வந்தது. 8 ஆம் நாளான சனிக்கிழமை சிறப்பு திருப்பலியைத் தொடர்ந்து, புனித தோமையார் உருவச்சிலை மின் அலங்காரத் தேரில் பவனியாக கொண்டு வரப்பட்டது.
வத்தலகுண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியே சென்ற இத்தேர் பவனியில், திருச்சிலுவை சகோதரிகள், அமலவை சகோதரிகள், பங்கு பேரவை நிர்வாகிகள், கல்லறைக் குழுவினர், வத்தலகுண்டு மேலக் கோவில்பட்டி, சின்னுப்பட்டி, மரியாயிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். அப்போது, உலக நன்மை வேண்டி ஜெபம் மற்றும் மன்றாடுதல் நிகழ்த்தப்பட்டது.
தொடர்ந்து, 9ஆவது நாள் திருப்பலி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டு, திருக்கொடி இறக்கப்பட்டு இத் திருவிழா நிறைவுற்றது.