திண்டுக்கல்

சிறுமலையில் மீட்கப்படும் 4 ஆயிரம் ஏக்கரை: சோலைக்காடுகளாக மாற்ற வனத்துறை திட்டம்

சிறுமலையில் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான ஆக்கிரமிப்பு காடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், அந்த பகுதிகளில் சோலைக் காடுகளை உருவாக்குவதற்கு வனத்துறை திட்டமிட்டுள்ளது.

ஆ. நங்கையார் மணி

சிறுமலையில் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான ஆக்கிரமிப்பு காடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், அந்த பகுதிகளில் சோலைக் காடுகளை உருவாக்குவதற்கு வனத்துறை திட்டமிட்டுள்ளது.
திண்டுக்கல் வனக் கோட்டத்தில் உள்ள சிறுமலை வனப்பகுதி சுமார் 17,500 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இந்த வனப் பகுதியை ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாத்து, மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில், கடந்த 1978-ம் ஆண்டு, காப்பு நிலமாக மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் தொடர்ச்சியாக கடந்த 2010-ம் ஆண்டு, சுமார் 7,500 ஏக்கர் காப்பு நிலம், காப்புக் காடாக (ரிசர்வ் பாரஸ்ட்) அறிவிக்கப்பட்டது.
 இதனிடையே, வனப்பகுதியில் உள்ள நிலங்களுக்கு பட்டா கேட்டு சிலர் தாக்கல் செய்த மனு  உயர்நீதிமன்ற தனி அமர்வில் கடந்த 2013-ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், வனப்பகுதியில் உள்ள காப்பு நிலங்களை, காப்புக்காடுகளாக மாற்றுவதற்கு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.
அதனைத்தொடர்ந்து தென்மலை, குரங்குபள்ளம் பகுதிகளில் 770 ஏக்கரில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புக் காடுகள் பகுதி-2 ஆகவும்,  பொன்னருவி பகுதியில் உள்ள 423 ஏக்கர் காடுகள் பகுதி-3ஆகவும், அகஸ்தியர்புரம் பகுதியில் உள்ள 1,500 ஏக்கர் காடுகள் பகுதி- 4ஆகவும், தாழைக்கிடை பகுதியில் உள்ள 1500 ஏக்கர் காடுகள் பகுதி-5 என வனத்துறை சார்பில் பட்டியலிடப்பட்டன.
 இந்த 4 பகுதிகளில் உள்ள காடுகளை, காப்புக் காடாக மாற்றுவதற்கு அடுத்தடுத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, பொன்னருவி பகுதியில் உள்ள 423 ஏக்கர் பரப்பிலான காடுகள், காப்புக்காடாக அறிவிக்கப்பட்டுவிட்டது. அதன் தொடர்ச்சியாக தென்மலை, குரங்குபள்ளம் மற்றும் அகஸ்தியர்புரம் பகுதியில் உள்ள 2,220 ஏக்கர் ஆக்கிரமிப்புக் காடுகளை, காப்புக் காடாக மாற்றுவதற்கான பணிகள் முடிவுற்று, அரசின் அறிவிப்புக்காக காத்திருக்கிறது.
 ஆக்கிரமிப்புக் காடுகளில், சவுக்கு மரங்கள் அதிக அளவில் உள்ளன. மேலும் பலா, மிளகு, காபி, சௌ சௌ, அவரை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்நிலையில் ஆக்கிரமிப்புக் காடுகளாக இருந்து, நீண்ட முயற்சிக்குப் பின் காப்புக்காடாக மாறியுள்ள பகுதிகளில் வேளாண் பயிர்களை அழித்துவிட்டு முழுமையாக வனத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்பதும், அந்த பகுதிகளில் சோலைக் காடுகளை உருவாக்குவதற்கான முயற்சிகளையும் வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என்பதும் இயற்கை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
இதுகுறித்து திண்டுக்கல் கோட்ட தலைமை வனப்பாதுகாவலர் வே.திருநாவுக்கரசு கூறியது: மொத்தமுள்ள 17,500 ஏக்கர் சிறுமலை வனப் பரப்பில், 9,625 ஏக்கர் காப்புக் காடாக அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போது ஆக்கிரமிப்பு காடுகளும் மீட்கப்பட்டு வருகின்றன. வன நிர்ணய அலுவலர் மூலம் விரைவில் அளவீடு செய்து, எல்லைக் கல் ஊன்றப்படும். 
அதன் தொடர்ச்சியாக சோலைக் காடுகளை உருவாக்குவதற்கான கருத்துரு தயார் செய்து அரசுக்கு பரிந்துரைக்கப்படும். சோலைக் காடுகள் உருவாகும்போது, சிறுமலை அடிவாரப் பகுதிகளின் எதிர்கால நீராதாரத்தை பாதுகாக்க முடியும். மேலும், வனப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் இனி முற்றிலும் தடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT