திண்டுக்கல்

காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றியும் 201 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகமில்லை

DIN


கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திட்டம் நிறைவேற்றப்பட்டபோதிலும், இதுவரை குடிநீர் விநியோகிக்கப்படாததால் ரெட்டியார்சத்திரம் பகுதியைச் சேர்ந்த 201 கிராம மக்கள் பாதிப்படைந்து வருவதாக ஐ.பெரியசாமி எம்எல்ஏ தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க கோரி திமுக சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திமுக துணைப் பொதுச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஐ.பெரியசாமி தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியது: 
காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து, திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் பகுதியுள்ள 201 கிராமங்களுக்கு குடிநீர் வழங்க 20 ஆண்டுகளுக்கு முன்பு திட்டம் வகுக்கப்பட்டது. 
இத்திட்டத்திற்கு தேவையான குடிநீர் தொட்டிகள் செம்மடைப்பட்டி, எல்லப்பட்டி, மைலாப்பூர், கன்னிவாடி, சீத்தமரம் நால்ரோடு உள்ளிட்டப் பகுதிகளில் ஆட்சி மாற்றம் காரணமாக 10 ஆண்டுகள் தாமதமாக கடந்த 2010 இல் முடிக்கப்பட்டது. அதற்கு பின் 9 ஆண்டுகளாகியும் இதுவரை குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை. 
 காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் உபரியாக சுமார் 70 லட்சம் லிட்டர் தண்ணீர் பெற்று வரும் நிலையில், அதில் 35 லட்சம் லிட்டர் தண்ணீர் குளங்களில் தேங்கி கிடக்கிறது. ஆனால், எதிர்கட்சித் தொகுதி என்ற ஒரு காரணத்திற்காக ரெட்டியார்சத்திரம் பகுதி மக்களுக்கு தண்ணீர் மறுக்கப்படுகிறது. 
மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆட்சியருக்கு 15 நாள்கள் மட்டுமே அவகாசம் அளித்துள்ளோம். அதற்குள் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணாதபட்சத்தில், குடிநீர் தொட்டிகளிலிருந்து குழாய்களுக்கு தண்ணீர் திறக்கும் பணியை நானே மேற்கொள்வேன். என்னை கைது செய்தாலும், அதனைப் பற்றி கவலைப்படப் போவதில்லை என்றார். 
கூட்டத்தில் 1000 பெண்கள் உள்பட சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். 
இதே போன்று, நத்தம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஏ.ஆண்டிஅம்பலம் தலைமை வகித்தார். இதில் ஒன்றியச் செயலர்கள் ரத்தினகுமார், வெள்ளைச்சாமி உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மேற்கு மாவட்டத் துணைச் செயலர் ராஜாமணி தலைமை வகித்தார். இதில், ஒன்றியச் செயலர்கள் சாமிநாதன், கவிதா பார்த்திபன், சுப்பையன், சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நகரச் செயலர் ராஜப்பா தலைமை வகித்தார். 
பழனி: பழனி பேருந்து நிலையம் மயில் ரவுண்டானா அருகே நகரச் செயலாளர் தமிழ்மணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் நகர்மன்றத் தலைவர் வேலுமணி, ஒன்றியச் செயலாளர் செளந்திரபாண்டியன், முன்னாள் ஒன்றியச் செயலாளர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் பங்கேற்றனர்.  பழனி சட்டப்பேரவை உறுப்பினரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐ.பி.செந்தில்குமார் கண்டன உரை நிகழ்த்தினார்.
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு,சட்டப்பேரவை உறுப்பினர் அர.சக்கரபாணி தலைமை வகித்தார். 
திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக துணைச்செயலாளர் சி.ராஜாமணி,  நகரச் செயலாளர் ப.வெள்ளைச்சாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் காதர்பாட்சா, வீ.கண்ணன், ப.ஆறுமுகம் 
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT