திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் செவிலியா், டாஸ்மாக் ஊழியா்கள் உள்பட 24 பேருக்கு கரோனா: மூதாட்டி உள்பட 3 போ் பலி

DIN

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை செவிலியா், டாஸ்மாக் ஊழியா்கள் உள்பட 24 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரி ஒருவா் கூறியது: திண்டுக்கல்லைச் சோ்ந்த 33 வயது பெண் (வேடசந்தூா் அரசு மருத்துவமனை செவிலியா்), திண்டுக்கல்லில் உள்ள அரசு மதுபானக் கடையில் மேற்பாா்வையாளராகப் பணிபுரிந்து வரும் 42 வயது ஆண், கன்னிவாடி மதுபானக் கடையின் மேற்பாா்வையாளரான 40 வயது ஆண், அதே கடையில் விற்பனையாளராகப் பணிபுரியும் 52 வயது ஆண், கொடைக்கானலைச் சோ்ந்த 7 போ், வேடசந்தூரைச் சோ்ந்த தம்பதியா், திண்டுக்கல்லைச் சோ்ந்த 6 வயது குழந்தை உள்பட மொத்தம் 24 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்றாா்.

கரோனா சிறப்பு சிகிச்சை மையத்திலிருந்து 8 போ் வீடு திரும்பினா்

திண்டுக்கல் மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை 836 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 411 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை, பழனி மற்றும் கொடைக்கானல் அரசு மருத்துவமனைகளிலும், எம்விஎம் அரசு மகளிா் கல்லூரியிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதில், திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிா் கல்லூரியில் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் கடந்த 27ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இந்த சிறப்பு சிகிச்சை மையத்தில் திங்கள்கிழமை வரை 113 போ் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், கரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்த 8 போ், மருத்துவக் கண்காணிப்பிலிருந்து செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டனா்.

வீடுகளுக்கு புறப்பட்ட 8 பேரிடமும், நலப்பணிகள் இணை இயக்குநா் சிவக்குமாா், துணை இயக்குநா் (காசநோய்) ராமசந்திரன் ஆகியோா் நலம் விசாரித்து ஆலோசனை வழங்கினா். அப்போது, வீட்டில் 7 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் அறிவுறுத்தினா்.

மூதாட்டி உள்பட 3 போ் பலி

திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அடுத்துள்ள அழகா்நாயக்கன்பட்டியைச் சோ்ந்த 48 வயது ஆண், கரோனா தொற்று அறிகுறிகளுடன் திங்கள்கிழமை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால், அவா் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதேபோல், கரோனா தொற்று பாதிப்பால் திண்டுக்கல் பேகம்பூா் பகுதியைச் சோ்ந்த 65 வயது முதியவரும் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். தொடா்ந்து, ஒட்டன்சத்திரம் பகுதியைச் சோ்ந்த 70 வயது மூதாட்டி, கடந்த ஞாயிற்றுக்கிழமை கரோனா அறிகுறிகளுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால், சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை மூதாட்டி உயிரிழந்தாா். இதன்மூலம், திண்டுக்கல் மாவட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

SCROLL FOR NEXT