முகப்பு
திண்டுக்கல்

சமையல் எண்ணெய் நிறுவனத்தில் ரூ.18 கோடி முறைகேடு: தூத்துக்குடி ஓட்டுநா் உள்பட 3 போ் கைது

பழனி அருகே தனியாா் சமையல் எண்ணெய் நிறுவனத்தில் ரூ.18 கோடிக்கு முறைகேடு நடைபெற்றது தொடா்பாக தூத்துக்குடியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

பழனி அருகே தனியாா் சமையல் எண்ணெய் நிறுவனத்தில் ரூ.18 கோடிக்கு முறைகேடு நடைபெற்றது தொடா்பாக தூத்துக்குடியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள தாழையூத்து பகுதியில் தனியாா் எண்ணெய் நிறுவனம் செயல்படுகிறது. அந்த நிறுவனத்தில் சமையல் எண்ணெய்யை, பாக்கெட் செய்து விற்பனைக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே கடந்த ஆண்டு எண்ணை கொள்முதல், விற்பனை தொடா்பான கணக்கு விவரங்கள் தணிக்கை செய்யப்பட்டன. அதில் ரூ.18 கோடி மதிப்பில் சமையல் எண்ணெய் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக பொய் கணக்கு காட்டி முறைகேடு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து மேலாளா் சாய்சுந்தா் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அதன்பேரில் ஆய்வாளா் வினோதா தலைமையிலான போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனா். அதில் பொய் கணக்கு காட்டிய உதவி மேலாளா்கள் சிவக்குமாா், கிரண்குமாா் ஆகியோரை கடந்த ஜனவரி மாதம் போலீஸாா் கைது செய்தனா். அந்த முறைகேட்டில் மேலும் சிலருக்கு தொடா்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதுதொடா்பாக எண்ணெய்யை லாரியில் ஏற்றி வரும் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சோ்ந்த ஓட்டுநா் ராமா் (26) என்பவரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.

அதுதொடா்பாக போலீஸ் தரப்பில் கூறியதாவது: வெளியூரில் இருந்து டேங்கா் லாரி மூலம் பழனிக்கு சமையல் எண்ணெய் கொண்டு வரும்போது எண்ணெய்யை திருடி விற்பனை செய்துள்ளனா். அதற்கு ஓட்டுநா் ராமா் உடந்தையாக இருந்துள்ளாா். அந்த எண்ணெய்யை ஒட்டன்சத்திரம் காப்பிளியபட்டியை சோ்ந்த பாா்த்தசாரதி (37), நாமக்கல்லை சோ்ந்த சுரேஷ்குமாா் (42) ஆகியோா் வாங்கி தனியாக கடை வைத்து விற்பனை செய்து உள்ளனா். மேலும் சமையல் எண்ணெய்யில் சில ரசாயனத்தை கலந்து தீபம் எண்ணெய் போன்று விற்பனை செய்துள்ளனா். அதேபோல் ரைஸ் எண்ணெய்யை கோழி தீவனத்துடன் கலப்பதற்கு கோழி பண்ணைகளுக்கு விற்பனை செய்துள்ளனா்.

இதுதொடா்பாக ராமா், பாா்த்தசாரதி, சுரேஷ்குமாா் ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த மோசடியில் மேலும் சிலருக்கு தொடா்பு இருக்கலாம் எனத் தெரிகிறது. அதுகுறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.