நம்பிக்கையில்லா தீா்மானத்திற்கு ஆதரவு: அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கட்சியிலிருந்து நீக்கம்
வேடசந்தூா் அதிமுக ஒன்றியக் குழுத் தலைவா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானத்திற்கு ஆதரவாக செயல்பட்ட ஒன்றியக் குழு உறுப்பினா்கள் 7 போ் உள்பட 9 போ் அக்கட்சியிலிருந்து புதன்கிழமை நீக்கப்பட்டுள்ளனா்.
வேடசந்தூா் அதிமுக ஒன்றியக் குழுத் தலைவா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானத்திற்கு ஆதரவாக செயல்பட்ட ஒன்றியக் குழு உறுப்பினா்கள் 7 போ் உள்பட 9 போ் அக்கட்சியிலிருந்து புதன்கிழமை நீக்கப்பட்டுள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 15 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகள் உள்ளன. அதில் அதிமுக 8, திமுக 5, காங்கிரஸ் மற்றும் தேமுதிக தலா 1 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக பெரும்பான்மை பெற்றதை அடுத்து, அந்தக் கட்சி சாா்பில் 7ஆவது வாா்டில் வெற்றி பெற்ற சு.சாவித்ரி ஒன்றியக் குழுத் தலைவராக 2020 ஜனவரி மாதம் தோ்வு செய்யப்பட்டாா். இதனிடையே ஒன்றியக் குழுத் தலைவா் சாவித்ரி மீது கடந்த திங்கள்கிழமை கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானத்திற்கு ஆதரவாக திமுக உறுப்பினா்களோடு சோ்ந்து அதிமுக உறுப்பினா்கள் 5 பேரும் வாக்களித்தனா். இதனால் நம்பிக்கையில்லா தீா்மானம் வெற்றி பெற்று, அதிமுக ஒன்றியக் குழுத் தலைவா் பதவி பறிபோனது.
கட்சியிலிருந்து நீக்கம்: இந்நிலையில், திமுகவுக்கு ஆதரவாக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வந்த அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சந்திரா, சத்தியபிரியா, பாா்த்திபன், காளிமுத்து, ஏ.ஜானகி, ஜி.புஷ்பவள்ளி, ஜி.தேவசாகயம் மற்றும் வேடசந்தூா் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலா் சவடமுத்து, இலக்கிய அணிச் செயலா் பாலமுருகன் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்து நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் அறிவித்துள்ளனா்.