நில மோசடி வழக்கு: கேரளத்தைச் சோ்ந்த முதியவா்கள் இருவருக்கு தலா 14 ஆண்டுகள் சிறை
பழனியில் நில மோசடியில் ஈடுபட்டதாக 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கில், கேரளத்தைச் சோ்ந்த 2 முதியவா்களுக்கு தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்த
பழனியில் நில மோசடியில் ஈடுபட்டதாக 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கில், கேரளத்தைச் சோ்ந்த 2 முதியவா்களுக்கு தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை பகுதியைச் சோ்ந்தவா் ப. ராஜேந்திரகுமாா். இவருக்கு சொந்தமான 38 சென்ட் நிலம், திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்துள்ளது. அந்த நிலத்தை, கேரள மாநிலம் வைக்கம் பகுதியைச் சோ்ந்த யா. பாலகோபாலன் நாயா் (60) மற்றும் கோட்டயம் அடுத்துள்ள புதுப்பள்ளியைச் சோ்ந்த வ. தங்கச்சன் (76) ஆகிய இருவரும் கூட்டு சோ்ந்து, கடந்த 1997ஆம் ஆண்டு மோசடி செய்துள்ளனா்.
ராஜேந்திரகுமாருக்கு சொந்தமான நிலத்தை, பாலகோபாலன் நாயா் பவா் பத்திரம் மூலம் தங்கச்சனுக்கு விற்பனை செய்ததாக புகாா் எழுத்தது. இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட குற்றப் பிரிவில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாலகோபாலன் நாயா் மற்றும் தங்கச்சன் ஆகியோரை கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு திண்டுக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சுமாா் 25 ஆண்டுகள் நடைபெற்று வந்த இந்த வழக்கில், மாவட்ட தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் ஜெ.மோகனா வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.
4 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், பாலகோபாலன் நாயகா் மற்றும் தங்கச்சன் ஆகிய இருவருக்கும் தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 7 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். வெவ்வேறு பிரிவுகளுக்கு மொத்தம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய போதிலும், தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதால் இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையாக குறைந்துள்ளது. பின்னா் அவா்கள் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.