முகப்பு
திண்டுக்கல்

6 மாதங்களில் 52 டன் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல்: 135 போ் கைது

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 52 டன் கடத்தல் ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீஸாா் பறிமுதல் செய்து 135 பேரை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:48 AM
பகிர்:

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 52 டன் கடத்தல் ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீஸாா் பறிமுதல் செய்து 135 பேரை கைது செய்தனா்.

ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரா்களுக்கு அரிசி மட்டுமின்றி, கோதுமை, சமையல் எண்ணெய், மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருள்களும் விநியோகிக்கப்படுகின்றன. இந்த பொருள்களை வெளிச் சந்தையில் விற்பனை செய்வதை தடுப்பதற்காக, மாவட்ட அளவில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாா் பணியாற்றி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டத்தில், கடந்த 6 மாதங்களில் மட்டும் கடத்தப்பட்ட 52 டன் ரேஷன் அரிசி, 400 கிலோ கோதுமை, 125 லிட்டா் மண்ணெண்ணெய், 95 லிட்டா் சமையல் எண்ணெய் ஆகியவற்றை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

இந்த பொருள்களின் அரசு மதிப்பு ரூ.3.15 லட்சம். அதேபோல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு லாரி, 12 வேன்கள், 3 ஆட்டோக்கள், ஒரு இருசக்கர வாகனம் என ரூ.18.70 லட்சம் மதிப்பிலான வாகனங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா். 129 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 135 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

பழனி அருகே 1.50 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இதனிடையே, பழனியிலிருந்து ஒரு சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் ஆய்வாளா் கீதா, சாா்பு- ஆய்வாளா் காா்த்திகேயன் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் பழனி கொடைக்கானல் சாலையில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டுள்ளனா். அப்போது 1.50 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்த சரக்கு வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா். கடத்தலில் ஈடுபட்ட 6 நபா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.