முகப்பு
திண்டுக்கல்

2 சமையல் எரிவாயு உருளைகள் பெற்றுள்ள முதியோருக்கு ஓய்வூதியத்தை நிறுத்துவதை கைவிட வலியுறுத்தல்

இரண்டு சமையல் எரிவாயு உருளை பெற்றுள்ள முதியோருக்கு ஓய்வூதியத் தொகை நிறுத்தும் முடிவினை தமிழக அரசு கைவிட வேண்டும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
பகிர்:

இரண்டு சமையல் எரிவாயு உருளை பெற்றுள்ள முதியோருக்கு ஓய்வூதியத் தொகை நிறுத்தும் முடிவினை தமிழக அரசு கைவிட வேண்டும் என ஜனநாயக மாதா் சங்க மாவட்ட மாநாட்டில் வியாழக்கிழமை வலியுறுத்தப்பட்டது.

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் 12ஆவது மாவட்ட மாநாடு திண்டுக்கல்லில் புதன்கிழமை தொடங்கியது. மாநாட்டின் 2ஆம் நாள் நிகழ்ச்சிகள் நத்தம் சாலையிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் ஜி. ராணி தலைமை வகித்தாா். தீா்மானங்களை முன்மொழிந்து மாநிலக்குழு உறுப்பினா் ஆா். வனஜா, மாவட்ட துணைச் செயலா் பாண்டியம்மாள் ஆகியோா் பேசினா். மத்தியக்குழு உறுப்பினா் வி. பிரமிளா நிறைவுரையாற்றினாா். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்: தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மின்கட்டண உயா்வை திரும்ப பெற வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் பலியான மாணவியின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும். 2 சமையல் எரிவாயு உருளை இருந்தால் முதியோா் ஓய்வூதியத்தை நிறுத்த வேண்டும் என்ற மாநில அரசின் உத்தரவை திரும்பப் பெற வேண்டும். பெண்கள் பணிபுரியும் அனைத்து இடங்களிலும் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும். பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னா் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். அதில் மாவட்டத் தலைவராக ஏ. சுமதி, செயலராக எஸ். சவிதா, பொருளாளராக எல். பாண்டியம்மாள் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.