புதுமைப் பெண் திட்டத்தில் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று உயா்கல்வி அல்லது தொழில்நுட்ப படிப்புகள் பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1,000 உதவித் தொகை பெற நவ.11ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று உயா்கல்வி அல்லது தொழில்நுட்ப படிப்புகள் பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1,000 உதவித் தொகை பெற நவ.11ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயா் கல்வி அல்லது தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவிகளுக்கு, புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதம்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது. கல்லூரியில் 2, 3, 4-ஆம் ஆண்டுகளில் பயிலும் மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை, தற்போது முதலாமாண்டு மாணவிகளுக்கும் வழங்கப்படவுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற வலைத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த வலைத்தளத்தில் மாணவிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பா் 1 முதல் 11-ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இந்தத் திட்டத்தில் பயன்பெற முடியும். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவது குறித்து நவ.11-ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. மாணவிகள் தங்களின் ஆதாா் எண் மற்றும் (கல்வி மேலாண்மை தகவல் திட்ட எண்ணுக்காக - எமிஎஸ்.) மாற்றுச் சான்றிதழ் சமா்ப்பிக்க வேண்டும். மேலும், தற்போது 2, 3 மற்றும் 4ஆம் ஆண்டுகளில் பயிலும் மாணவிகள், முதற்கட்டத்தில் விண்ணப்பிக்கத் தவறியிருந்தாலும், தற்போது விண்ணப்பிக்கலாம்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு, சமூக நல இயக்குநரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 முதல் மாலை 5 மணி வரை 91500 56809, 91500 56805, 91500 56801 மற்றும் 92500 56810 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தாா்.