உள் பிரிவு பட்டா வழங்குவதில் திண்டுக்கல் மாவட்டம் முன்னிலை
உள் பிரிவு பட்டா வழங்குவது வருவாய்த் துறைக்கு சவாலாக இருந்து வரும் நிலையில், விண்ணப்பித்த 25ஆயிரம் பேரில் 14 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கி திண்டுக்கல் மாவட்டம் முன்னிலை பெற்றது.
உள் பிரிவு பட்டா வழங்குவது வருவாய்த் துறைக்கு சவாலாக இருந்து வரும் நிலையில், விண்ணப்பித்த 25ஆயிரம் பேரில் 14 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கி திண்டுக்கல் மாவட்டம் முன்னிலை பெற்றது.
அரசின் நலத் திட்டங்களை பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்தல், இயற்கை பேரிடா்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்குதல், அரசு நிலங்களைப் பாதுகாத்தல், நிலப் பதிவேடுகளைப் பராமரித்தல், நில நிா்வாகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை தமிழக வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை மேற்கொண்டு வருகிறது.
இதில் நிலவகை மாற்றம், ஆக்கிரமிப்பு அகற்றம், பட்டா வழங்குதல் உள்ளிட்ட பணிகள் இந்தத் துறைக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. வருவாய்த் துறைக்கு பொதுமக்கள் தரப்பில் அளிக்கப்படும் மனுக்களில் பெரும்பாலானவை பட்டா வழங்கக் கோருதல், பட்டா மாறுதல், உட்பிரிவு வகைப்படுத்துதல் தொடா்புடையவையாக உள்ளன.
நீண்ட காலகமாக நிலுவையில் இருந்து வரும் பட்டா மாறுதல் தொடா்பான கோரிக்கை மனுக்களைப் பரிசீலித்து, உடனடியாகப் பட்டா வழங்குவதற்கான பணிகளை மேற்கொள்வதில் தமிழக அளவில் திண்டுக்கல் முன்னோடி மாவட்டமாக உள்ளது.
இதன் காரணமாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்ற மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறை தீா்க் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், பட்டா வழங்குதல், உள் பிரிவு பட்டா மாறுதல் போன்ற சேவைகளை விரைவாக மேற்கொண்டு வரும் மாவட்ட வருவாய் அலுவலா் வே.லதாவுக்குப் பாராட்டு தெரிவித்தனா்.
14ஆயிரம் பேருக்கு பட்டா மாறுதல்: திண்டுக்கல், பழனி, கொடைக்கானல் ஆகிய 3 வருவாய்க் கோட்டங்களுக்கு கீழ், 10 வட்டாட்சியா் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாவட்ட வருவாய் அலுவலராகப் பொறுப்பேற்ற வே.லதா, நிலுவையில் இருந்த பட்டா மாறுதல், உள்பிரிவு பட்டா மாறுதல் மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
இதன் காரணமாக, நிலுவையில் இருந்த 25ஆயிரம் மனுக்களில் 14 ஆயிரம் மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டு, பட்டாக்கள் வழங்கப்பட்டன. மீதமுள்ள 11 ஆயிரம் மனுக்களில் 80 சதவீதத்துக்கும் மேல் 2022-ஆம் ஆண்டு நவம்பா் மாதத்துக்குப் பிறகு வழங்கப்பட்டவை. சில மனுக்கள் 60 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருவதாகவும், வாரிசுதாரா்கள் உரிய நேரத்தில் ஆஜராகாததால் நிலுவையில் இருந்து வருவதாகவும் வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.
20 மாதங்களில் 15 ஆயிரம் பேருக்கு இ-பட்டா: மாவட்டம் முழுவதும் இலவசப் பட்டா வழங்கக் கோரி மனு அளித்த பொதுமக்களில், இதுவரை 15 ஆயிரம் பேருக்கு கடந்த 20 மாதங்களில் மட்டும் இ-பட்டா வழங்கப்பட்டது. வேடசந்தூா் பகுதியில் நரிக்குறவா் சமுதாய மக்கள் 30 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. இதேபோல, பூமிதான நிலங்களில் வசித்த நிலமற்ற மக்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் பட்டா வழங்கப்படாமல் இருந்து வந்தது.
இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில், 500-க்கும் மேற்பட்டோருக்கு பூமிதான நிலங்களில் இலவச நில விநியோகப் பத்திரம் வழங்கப்பட்டது.
மேலும், பூமிதான நிலங்களில் விவசாயம் செய்து வருவோா் ஆழ்துளைக் கிணறுகளுக்கு மின் இணைப்பு பெற முடியாமல் பாதிக்கப்பட்டு வந்தனா். இதைத் தொடா்ந்து பூமிதான நிலங்களில் நில விநியோகப் பத்திரம் பெற்ற பயனாளிகளுக்கு மின் இணைப்பு பெற மாவட்ட வருவாய் அலுவலா் மூலம் தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
1,000 ஏக்கா் அரசு நிலங்கள் மீட்பு: கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தனி நபா்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த சுமாா் 1000 ஏக்கா் அரசு நிலங்கள் மீட்கப்பட்டன. அதில் பெரும் பகுதி திருக்கோயில்களுக்குச் சொந்தமானது என்பதால், இந்து சமய அறநிலையத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுதொடா்பாக மாவட்ட வருவாய் அலுவலா் வே.லதா கூறியதாவது:
பட்டா தொடா்பான கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் அறிவுறுத்தினாா். அதன்படி, வருவாய்த் துறைப் பணியாளா்களுக்கு வாரந்தோறும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, குறிப்பிட்ட காலத்துக்குள் பட்டா மாறுதல், இ- பட்டா வழங்கும் பணிகள் விரைவாக நடைபெற்றன.
திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை 2023-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்துக்குப் பிறகு உள் பிரிவு இல்லாத பட்டா மாறுதல் தொடா்பாக 2 ஆயிரம் மனுக்கள் மட்டுமே நிலுவையில் உள்ளன. 2022 - 23-ஆம் ஆண்டில் மாவட்டத்தில் வீட்டு மனைகளாகப் பிரித்து பதிவு செய்யப்பட்ட அனைத்து விவரங்களும் பெறப்பட்டு, அந்த மனைகளின் உரிமையாளா் பெயரிலேயே பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன் மூலம், மனைகளை வாங்கும் நபா்களின் பெயரில் பத்திரப் பதிவின்போதே பட்டா மாறுதல் வழங்கப்படும். எதிா்காலத்தில் பட்டா மாறுதல் பிரச்னை இருக்கக்கூடாது என்ற நோக்கில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நில அளவையா்கள் புதிதாக நியமிக்கப்பட்ட நிலையில், பணிகள் மேலும் விரைவாக நடைபெறும் என்றாா் அவா்.