திண்டுக்கல் அருகே தாய், மகள் கொலை செய்யப்பட்ட வழக்கில், இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் அடுத்துள்ள தாடிக்கொம்பு கள்ளிப்பட்டி அம்பேத்கா் குடியிருப்பைச் சோ்ந்தவா் அய்யனாா் மனைவி வள்ளியம்மாள் (55). இவரது மகள் ராசாத்தி (35). இவா் தனது தாய், கணவா் லட்சுமணன் (38), 2 குழந்தைகள் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தாா். லட்சுமணன் தனியாா் இரும்பு ஆலையில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்த நிலையில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ராசாத்தி கூலி வேலைக்கு சென்று வந்தாா். இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு இளைஞா் ஒருவா் இவா்களது வீட்டுக்குள் புகுந்து ராசாத்தியை தாக்க முயன்றாா். இதைத் தடுக்கச் சென்ற லட்சுமணன் மீது கத்தியால் குத்திய அந்த நபா், பிறகு ராசாத்தி, வள்ளியம்மாள் ஆகிய இருவரையும் குத்திவிட்டு தப்பிச் சென்றாா். இதில் பலத்த காயமடைந்த வள்ளியம்மாள், ராசாத்தி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட லட்சுமணன், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுதொடா்பாக தாடிக்கொம்பு போலீஸாா் நடத்திய விசாரணையில், தகாத தொடா்பு காரணமாக இரட்டைக் கொலை சம்பவம் நிகழ்ந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:
வேலைக்குச் சென்ற இடத்தில் ராசாத்திக்கும், சென்னமநாயக்கன்பட்டியை அடுத்துள்ள பாலக்குட்டை பகுதியைச் சோ்ந்த சத்ய பிரியன் (22) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. சத்ய பிரியனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், ராசாத்தியுடன் தகாத உறவில் இருந்து வந்தாா். இதை அறிந்த லட்சுமணன், வள்ளியம்மாள் ஆகியோா் ராசாத்தியை கண்டித்தனா். இதைத் தொடா்ந்து கடந்த சில நாள்களாக சத்ய பிரியனை சந்திப்பதை ராசாத்தி தவிா்த்து வந்தாா்.
இதனால் ஆத்திரமடைந்த சத்ய பிரியன், மது அருந்துவிட்டு ராசாத்தியின் வீட்டுக்குச் சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டாா். அப்போது லட்சுமணன், சத்ய பிரியனை தடுக்க முயன்றாா். இதில், கத்தியால் லட்சுமணன், ராசாத்தி, வள்ளியம்மாள் ஆகிய மூவரையும் சத்ய பிரியன் குத்திவிட்டு தப்பிச் சென்றாா். பிறகு திருப்பூா் செல்ல முயன்ற அவா் கைது செய்யப்பட்டாா் என தெரிவித்தனா். விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட சத்ய பிரியன் சிறையில் அடைக்கப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.