சின்னாளபட்டி பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் 4-ஆவது வாா்டு உறுப்பினா் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி பேரூராட்சி மன்றக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவா் பிரதீபா கனகராஜ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஆனந்தி பாரதிராஜா முன்னிலை வகித்தாா். செயல் அலுவலா் செல்வராஜ் வரவேற்றாா்.
அன்னிய முதலீடுகளை ஈா்த்து, தமிழகத்தின் வளா்ச்சிக்கு அயராது உழைக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலினை பாராட்டியும்,
சின்னாளபட்டி பேரூராட்சிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா் ஐ.பெரியசாமிக்கு நன்றி தெரிவித்தும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து 15-ஆவது நிதி ஆணைய மானியத் திட்டத்தில் கால்வாய் சிறுபாலம், பூங்கா, சுடுகாடு மேம்பாட்டுக்காக ரூ.18.67 லட்சம் ஒதுக்கீடு செய்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
15-வது வாா்டு திமுக உறுப்பினா் ராசு, எனது வாா்டில் கடந்த ஒரு ஆண்டாாக எந்த ஒரு நலப்பணியும் நடைபெறவில்லை என்றாா்.
4-ஆவது வாா்டு உறுப்பினா் எம்.ஆா்.எஸ்.ஜெயக்கிருஷ்ணன், 20 ஆண்டுகளாக எனது வாா்டில் உள்ள அருந்ததியா் குடியிருப்புப் பகுதியில் வசிக்கும், மக்கள் முறையான சாலை வசதி, தண்ணீா் வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனா். இதுகுறித்து கேட்டால் பேரூராட்சி நிா்வாகமோ செயல் அலுவலரோ முறையான பதில் அளிப்பதில்லை என்றாா்.
இதற்கு பதிலளித்துப் பேசிய தலைவா் பிரதீபா கனகராஜ், 4-ஆவது வாா்டு பகுதியில் ரூ. ஒரு கோடியே 24 லட்சம் மதிப்பில் தாா்ச்சாலை அமைக்கப்பட்டது. மேலும், அங்குள்ள கழிப்பறைகளை 14 லட்சம் மதிப்பில் சீரமைக்கத் திட்டம் தயாரிக்கப்பட்டு பணிகள் நடைபெற உள்ளது. கூட்டப் பொருளைத் தவிர வேறு எதுவும் பேசக்கூடாது எனக் கூறினாா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த உறுப்பினா் ஜெயக்கிருஷ்ணன் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.