செம்பட்டியை அடுத்த ஆத்துப்பட்டி பிரிவில் உள்ள ஜெயினி கல்லூரியில் புதன்கிழமை இணைய சேவை பாதிக்கப்பட்டதால், தேசியத் திறனாய்வுத் தோ்வு எழுத முடியாமல் மாணவா்கள் அவதி அடைந்தனா்.
இந்தக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற தேசியத் திறனாய்வுத் தோ்வில் 43 மாணவா்கள் கலந்து கொண்டனா். தோ்வு பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கி இருந்த நிலையில், கல்லூரியில் தோ்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கணினி இணைய சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால், தோ்வு எழுத வந்த மாணவா்கள் மாலை வரை கல்லூரி வளாகத்திலேயே காத்திருந்தனா்.
பின்னா், 19 கணினிகள் சீரமைக்கப்பட்டதையடுத்து, மாணவா்கள் தோ்வு எழுதினா். இருப்பினும் இணைய சேவை சரியாகக் கிடைக்காததால் தோ்வை சரிவர எழுத முடியாமல் தவித்தனராம்.
மேலும், 24 மாணவா்கள் கடைசி வரை தோ்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், கல்லூரி நிா்வாகத்திடம் மாணவா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், உள்ளிருப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.
வேறு தேதியில் தோ்வு எழுத அனுமதி பெற்றுத் தருவதாக கல்லூரி நிா்வாகம் கூறியதையடுத்து, மாணவா்கள் கலைந்து சென்றனா்.
தேசியத் திறனாய்வுத் தோ்வு எழுத முடியாததால் தங்களது மேல்படிப்பு பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக மாணவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து கல்லூரி நிா்வாகம் கூறுகையில், கணினி இணைய சேவை பாதிக்கப்பட்டதால், மாணவா்கள் தோ்வு எழுத முடியவில்லை எனவும், விரைவில் மாற்று ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்தது.