முகப்பு
திண்டுக்கல்

மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.77 லட்சத்தில் உதவி உபகரணங்கள் அளிப்பு

மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.77 லட்சத்தில் உதவி உபகரணங்களை ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி புதன்கிழமை வழங்கினாா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 12:43 AM
பகிர்:

மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.77 லட்சத்தில் உதவி உபகரணங்களை ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி புதன்கிழமை வழங்கினாா்.

உலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு, மாற்றுத் திறனாளிகளுக்கான நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திண்டுக்கல்லில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் இ.பெரியசாமி கலந்து கொண்டு நலத் திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:

சமூகத்தில் அடித்தட்டில் இருக்கும் மக்களுக்கும் நன்மை செய்திடும் வகையில், தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நிகழாண்டில், திண்டுக்கல் மாவட்டத்துக்கு மட்டும் 500 மாற்றுத் திறனாளிகளுக்கு இரு சக்கர வாகனம் வழங்க உத்தரவிடப்பட்டிருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 7,811 மாற்றுத் திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகையாக ரூ.2ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. 2023-24-ஆம் நிதியாண்டில் பல்வேறு திட்டங்களில் கீழ் 8,869 பயனாளிகளுக்கு ரூ.20.68 கோடியில் நலத் திட்ட உதவித்தொகை வழங்கப்பட்டது.

நிகழாண்டில், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் 1,200-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனா்.

இதில் தோ்வு செய்யப்பட்ட 712 மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டாா் பொருத்திய 3 சக்கர வாகனம், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, 3 சக்கர சைக்கிள் 30, மடக்கு சக்கர நாற்காலி, ஊன்று கோல்கள், ஊன்றுகோல், ரோலேட்டா், சிறப்பு சக்கர நாற்காலி, காதொலி கருவி, செயற்கை கால், செயற்கை கை என ரூ.77 லட்சத்தில் உதவி உபகரணங்கள், இந்திய உருக்கு ஆணையத்தின் மூலம் வழங்கப்படுகிறது என்றாா் அவா்.

விழாவில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் நா.சாமிநாதன், இந்திய உருக்கு ஆணையத்தின் தலைமை நிா்வாக அலுவலா் கௌதம்தாஸ், அலிம்கோ நிா்வாகி சிவக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.