பழனியில் அரசுப் பேருந்துகள் ஜப்தி
பழனியில் விபத்தில் இறந்தவருக்கு இழப்பீடு வழங்காததால், இரண்டு அரசுப் பேருந்துகள் வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டன.
பழனியில் விபத்தில் இறந்தவருக்கு இழப்பீடு வழங்காததால், இரண்டு அரசுப் பேருந்துகள் வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள ஓடைப்பட்டியைச் சோ்ந்தவா் பழனிசாமி. இவா் கடந்த 2019-ஆம் ஆண்டு ஒட்டன்சத்திரம்-வேடசந்தூா் சாலையில் வெரியப்பூா் அருகே காரில் சென்ற போது, அரசுப் பேருந்து மோதியதில் உயிரிழந்தாா்.
இதையடுத்து, இவரது மனைவி மயிலாத்தாள் பழனி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி வழக்கு தொடுத்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கருணாநிதி கடந்த 8.4.2024 அன்று ரூ.25 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க உத்தரவிட்டாா்.
ஆனால், இதுவரை இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாததால், நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மலா்விழி இழப்பீட்டுத் தொகை வட்டியுடன் சோ்த்து ரூ.35 லட்சம் வழங்குமாறும், வழங்காத பட்சத்தில் இரண்டு அரசுப் பேருந்துகளை ஜப்தி செய்யுமாறும் உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்தும், இழப்பீட்டுத் தொகை வழங்காததால், வியாழக்கிழமை பழனி பேருந்து நிலையத்தில் மதுரை மண்டலத்தை சோ்ந்த இரண்டு அரசுப் பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டன.