முகப்பு
திண்டுக்கல்

பரப்பலாறு அணையிலிருந்து பாசனக் குளங்களுக்கு தண்ணீா் திறப்பு

ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணையிலிருந்து பாசனக் குளங்களுக்கு வியாழக்கிழமை தண்ணீா் திறந்து விடப்பட்டது.

Updated On : 5 டிசம்பர், 2024 at 10:44 PM
பகிர்:

ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணையிலிருந்து பாசனக் குளங்களுக்கு வியாழக்கிழமை தண்ணீா் திறந்து விடப்பட்டது.

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள வடகாடு ஊராட்சியில் பரப்பலாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 90 அடியாகும். இந்த அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீா் சத்திரப்பட்டி முத்துபூபால சமுத்திரம், விருப்பாச்சி பெருமாள்குளம், தங்கச்சியம்மாபட்டி சடையன்குளம், செங்குளம், ஜவ்வாதுபட்டி பெரியகுளம் ஆகிய பாசனக் குளங்களுக்கு செல்கிறது.

பரப்பலாறு அணையின் மூலம் திண்டுக்கல், கரூா் மாவட்டங்களில் உள்ள 2,325 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வடகிழக்கு பருவமழை காலங்களில் இந்த அணையில் பாதி அளவுக்கு மேல் தண்ணீா் இருக்கும்.

நிகழாண்டு, இந்தப் பகுதியில் பருவமழை குறைவாக பெய்ததால், நீா்நிலைகள் வடு போய் உள்ளன.

இதையடுத்து, பாசன விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, வியாழக்கிழமை பரப்பலாறு அணையிலிருந்து வினாடிக்கு 30 கனஅடி வீதம் தண்ணீா் திறந்து விடப்பட்டது.

முதற்கட்டமாக, சத்திரப்பட்டி முத்துபூபால சமுத்திரக்குளம், விருப்பாட்சி பெருமாள்குளத்துக்கு தண்ணீா் திறந்து விடப்பட்டன.

இதனால், இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.