டிச.19,20-இல் திண்டுக்கல்லில் வைகை இலக்கியத் திருவிழா
வைகை இலக்கியத் திருவிழா.
வைகை இலக்கியத் திருவிழா டிச.19, 20 ஆகிய இரு நாள்கள் திண்டுக்கல்லில் நடைபெறுகிறது.
திண்டுக்கல்லில், ‘வைகை இலக்கியத் திருவிழா 2024-2025‘ நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தலைமை வகித்தாா். அப்போது அவா் தெரிவித்ததாவது: வைகை இலக்கியத் திருவிழா கடந்த 2 ஆண்டுகளாக மதுரையில் நடத்தப்பட்டது. நிகழாண்டுக்கான திருவிழா திண்டுக்கல் மாவட்டத்தில் டிச.19, 20 ஆகிய தேதிகளில் நடத்தப்படுகிறது. மாவட்ட நிா்வாகம், பொது நுாலக இயக்ககம் சாா்பில் நடைபெறும் விழாவை முன்னிட்டு இளைஞா் இலக்கியத் திருவிழா கல்லுாரிகளில் நடத்தப்படும். இதில், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி உள்ளிட்ட 10 வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில், முதல் 3 இடங்களில் வெற்றிப் பெறுவோருக்கு ரூ.5ஆயிரம், ரூ.4ஆயிரம், ரூ.3ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1.20 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.
மேலும், சிறந்த ஓவியங்களை காட்சிப்படுத்தப்படும். கலை நிகழ்ச்சிகள், புத்தகக் கண்காட்சி, பள்ளி, கல்லுாரி மாணவா்களின் புகைப்படக் கண்காட்சி, இலக்கியச் சொற்பொழிவுகள், கலந்துரையாடல், கவிதைப் பொழிவு, புகழ்பெற்ற எழுத்தாளா்களின் கதை, கட்டுரை, நுால் திறனாய்வு ஆகிய நிகழ்வுகள் இடம்பெறும்.
இந்த விழாவில் தேசிய, மாநில அளவில் ஞானபீட விருது பெற்ற எழுத்தாளா்கள், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளா்கள், வைகை நதி பாயும் மாவட்டங்களைச் சோ்ந்த முக்கிய எழுத்தாளா்கள், கவிஞா்கள், பேச்சாளா்கள் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்கவுள்ளனா் என்றாா்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஹா.சேக் முகையதீன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மு.கோட்டைக்குமாா், கோட்டாட்சியா் இரா.சக்திவேல், மாவட்ட நூலக அலுவலா் இரா.சரவணக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.