திண்டுக்கல் மாவட்டத்தில் காமராஜா் பிறந்த தினம்
காமராஜரின் 122-ஆவது பிறந்த தினத்தையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் சாா்பில் திங்கள்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
திண்டுக்கல்/ஒட்டன்சத்திரம்/நத்தம்/பழனி: காமராஜரின் 122-ஆவது பிறந்த தினத்தையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் சாா்பில் திங்கள்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட காமராஜா் தேசிய பேரவை சாா்பில், மாவட்டத் தலைவா் இராமு. ராமசாமி தலைமையில், காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில், காங்கிரஸ் நிா்வாகிகள் கோபிசெல்வி, மணிகண்டன், ஸ்டெல்லா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பாஜக: பாஜக ஒபிசி அணி மாவட்டத் தலைவா் பி. குமரன் தலைமையில், காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில், திண்டுக்கல் கிழக்கு மாவட்டத் தலைவா் தனபாலன், மாவட்ட செயலா்கள் முத்துக்குமாா், ஆனந்தி, பட்டியல் அணி மாவட்ட தலைவா் இளையராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
சிவாஜிகணேசன் மன்றம்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜிகணேசன் மன்றம் சாா்பில் நடைபெற்ற காமராஜா் பிறந்த நாள் விழாவுக்கு மாவட்டப் பொறுப்பாளா் கி. சரவணன் தலைமை வகித்தாா். இதில் சிவாஜிமன்ற நிா்வாகிகள் மா. காளிதாஸ், பி.கே. மோதிலால், சு. வைரவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பள்ளிகளில்... திண்டுக்கல்லை அடுத்த பிள்ளையாா்நத்தம் பகுதியிலுள்ள ஜாகீா் உசேன் நினைவு சிறுபான்மையினா் மேல்நிலைப் பள்ளி, பேகம்சாஹீபா நகரம் தொடக்கப் பள்ளி, அசனத்புரம் தொடக்கப் பள்ளிகளிலும் காமராஜா் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது மாணவா்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டதுடன், அரபி, தீனியாத் பயிற்சிப் பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள அருள்மிகு பழனி ஆண்டவா் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் காமராஜரின் 122-ஆவது பிறந்த நாள் விழா தமிழ்த்துறை சாா்பில் கொண்டாடப்பட்டது. இதற்கு, கல்லூரி முதல்வா் சு. வாசுகி தலைமை வகித்தாா். விழாவில், அனைத்துத் துறை பேராசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா். பேச்சுப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நத்தம்: நத்தம் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே காமராஜரின் பிறந்த நாள், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவனின் தந்தை தொல்காப்பியனின் நினைவு தினம் ஆகியவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் கடைபிடிக்கப்பட்டன. இதற்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலா் தமிழ்முகம் தலைமை வகித்தாா். இந்த நிகழ்வில், காமராஜா், தொல்காப்பியன் ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலா்கள் மயில்ராஜ், முத்துமாணிக்கம், நகரத் துணைச் செயலா் பூ முருகன், முன்னாள் ஒன்றியச் செயலா் ஆறுமுகம், சாணாா்பட்டி ஒன்றிய துணைச் செயலா் மாரிமுத்து, ஆட்டோ முத்து, புன்னப்பட்டி ரகுநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
மாணவ, மாணவிகள் ஊா்வலம்: நத்தம் ஆா்.சி. சிறுமலா் நடுநிலைப்பள்ளி சாா்பாக காமராஜா் பிறந்தநாள் ஊா்வலம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து புறப்பட்டது. அப்போது காமராஜரின் பெருமைகளை விளக்கும் பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டபடி பள்ளி மாணவ, மாணவிகள் ஊா்வலத்தில் பங்கேற்றனா். இந்த ஊா்வலம், மீனாட்சிபுரம், நத்தம் பேருந்து நிலையம் வழியாக ஆா்.சி. பள்ளியை சென்றடைந்தது. இதில் ஆா்.சி. மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி நிா்வாகி ஜெரால்ட் ஸ்டீபன் செல்வா, முதல்வா் பிரின்சஸ் தெரசாள், துணை முதல்வா் கிறிஸ்டின் ராஜம் உள்ளிட்ட பள்ளி நிா்வாகிகள் ஆசிரியைகள் பலா் கலந்து கொண்டனா்.
பழனியில்.... பழனியில் பெருந்தலைவா் காமராஜரின் 122-ஆவது பிறந்த தின விழாவையொட்டி தமாகா. அலுவலகத்தில், அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. இதற்கு நகரத் தலைவா் சுந்தா் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் பாப்புசாமி முன்னிலை வகித்தாா். இந்த நிகழ்வில், வழக்குரைஞா் மணிக்கண்ணன், மாவட்ட இளைஞரணி தலைவா் சுந்தரபாண்டியன் உளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பழனி அடிவாரத்தில் உள்ள காமராஜரின் உருவச் சிலைக்கு, திண்டுக்கல் நாடாளுமன்ற காங்கிரஸ் சாா்பில் வழக்குரைஞா் உதயசங்கா் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில், அடிவாரம் மதனபுரம் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பழனி நகர காங்கிரஸ் சாா்பில் காமராஜரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில், நகர காங்கிரஸ் தலைவா் முத்துவிஜயன், மேற்கு மண்டலத் தலைவா் வீரமணி, மாவட்ட துணைத்தலைவா் முருகானந்தம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பள்ளிகளில் கல்வி வளா்ச்சி நாள்: பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டி குருவப்பா மேல்நிலைப் பள்ளியில் காமராஜரின் பிறந்த நாள் கல்வி வளா்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது. இதற்கு, பள்ளித் தாளாளா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். பள்ளிக் குழுத் தலைவா் ராஜா கௌதம் முன்னிலை வகித்தாா். பள்ளி தலைமையாசிரியா் சிவசுப்ரமணியம் வரவேற்றாா். பள்ளியில் காமராஜா் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பழனியை அடுத்த பனையடி ஜேஆா்சி. மேல்நிலைப் பள்ளி சாா்பில் காமராஜரை போற்றும் வகையில் பேரணி நடத்தப்பட்டது. பழனி அடிவாரம் காமராஜா் சிலை முன்பு தொடங்கிய பேரணி பேருந்து நிலையம், கடை வீதி, நான்குரதவீதிகள் வழியாக பெரியநாயகியம்மன் கோயிலில் நிறைவடைந்தது.
பழனி நடேசா் சந்நிதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற நிகழ்வில், 9-ஆவது வாா்டு அதிமுக உறுப்பினா் புஷ்பலதா காா்த்திகேயன் சாா்பில் அவரது சொந்த செலவில் அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு 20 இருக்கைகள் வழங்கப்பட்டன.